ஆன்மிகம்

மயிலாடுதுறை மகாபுஷ்கரம் விழா: காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும்

மயிலாடுதுறையில் நடக்கும் மகாபுஷ்கரம் விழாவில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்று பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அறிவுறுத்தி உள்ளார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி மகாபுஷ்கரம் விழா வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பக்தர்கள் புனிதநீராடுவதற்கு வசதியாக புதிதாக நிரந்தர நீர்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

‘புஷ்கரம்‘ என்பது பொதுவாக புண்ணிய நதிகளையும், கோவில் தீர்த்த குளங்களையும் குறிக்கும். குருபகவான் ஒரு ராசியில் ஓராண்டு சஞ்சரிப்பவர். இவர் இருக்கும் ராசியின் பெயர்களுடன் சம்பந்தப்பட்ட நதிகளில் புஷ்கரம் உற்சவம் கொண்டாடப்படுவது இந்தியாவின் மரபாக இருந்து வந்துள்ளது. குருபெயர்ச்சி நிகழும் மாதத்தில் புஷ்கரம் விழா நடத்தப்படும்.

ஜோதிட சாஸ்திர கூற்றுப்படி தற்போது ஆவணி மாதம் குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கும் காலம் மகாபுஷ்கரமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் துலாம் மாதத்தில் (ஐப்பசி) மயிலாடுதுறையில் உள்ள கோவில்களில் பிரம்மோற்சவ விழாவும், காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டு வருகிறது. புஷ்கர புனிதநாளில் காவிரி ஆற்றில் நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கி, எல்லா நலனையும் பெற்று மகிழ்வார்கள் என்று கங்கா புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தோஷம் பாவம் எதுவாக இருந்தாலும், கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடினால், அவை அனைத்தும் நீங்கும். பொதுவாக பாவங்களை அக்னி அல்லது தண்ணீரால் மட்டுமே போக்க முடியும். இதில் புனித நீராடல் என்பது புண்ணிய பேறாகும்.

மயிலாடுதுறையில் நடைபெற உள்ள காவிரி மகாபுஷ்கரம் விழாவில் வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறைகளை ஓதியும், வேள்விகள் நிகழ்த்தியும் பல மகான்களின் முன்னிலையில் புனித நீராடுதலும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன், தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் பலர் இருந்தனர்.