ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரத்தின் முன் இருந்து ஜீயர்கள், பொதுமக்கள் யாகசாலைக்கு புறப்பட்ட போது எடுத்த படம். 
ஆன்மிகம்

காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிந்தனர்

144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் போது துலாம் ராசிக்கு உரிய காவிரி நதியில் புஷ்கரமானவர் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை வாசம் செய்வது ஐதீகம்.

அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசி துலாம் ராசியாக இருப்பதாலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா புஷ்கரம் வருவதாலும் காவிரி பாயும் எல்லா இடங்களிலும்் இந்த புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது.


காவிரி மகாபுஷ்கர விழா பூஜைக்காக ஸ்ரீரங்கத்தில் தயார் நிலையில் உள்ள யாகசாலை மண்டபத்தை படத்தில் காணலாம்.

மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 24-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

நேற்று காலை யாகசாலையில் வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா, ரங்கா கோபுரத்தில் இருந்து ஆதிநாகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர், ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோபராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக அம்மாமண்டபம் அருகில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி வந்தனர்.


ஊர்வலத்திற்கு முன்பாக கோலாட்டம் ஆடியபடி வந்த சிறுவர்-சிறுமிகள்.

காவிரி புஷ்கரம் விழாவின் தொடக்க நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் காவிரியாற்றில் நீராடி புனிதநீரை எடுத்துக்கொண்டு யாகசாலையை வந்தடைகின்றனர். பின்னர் 8 மணியளவில் கோபூஜை நடைபெறு கிறது. 9.15 மணி முதல் விஷ்வக்சேன இஷ்டி யாகம் தொடங்கு கிறது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பலவகையான யாகங்களை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தினமும்் மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.