அம்பலவாணசுவாமி கோவிலில், நெல்லையப்பர், காந்திமதி அம்மனுடன் கருவூர் சித்தருக்கு காட்சி அளித்தபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்

மானூரில், ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

தன் முன்வினையால் கருவூர் சித்தர் எண்வகை சித்திகளும், சிவத்தல யாத்திரை பேறும் பெற்றார். அதில் சிவத்தலங்களில் சென்று தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் வந்து காட்சி கொடுக்கும் பேறும் பெற்று இருந்தார். அவ்வாறு நெல்லைக்கு வந்து நெல்லையப்பரை வேண்டி அழைத்தபோது இறைவனது தரிசனம் கிடைக்க பெறாததால் கோபமடைந்த கருவூர் சித்தர், ‘ஈசன் இங்கு இலன், எருக்கும் குறுக்கும் எழுக‘ என சபித்துவிட்டு மானூர் வந்து சேர்ந்தார்.

இதனை அறிந்த நெல்லையப்பர் காந்திமதி அம்மனுடன், பாண்டிய மன்னன், அகஸ்தியர், தாமிரபரணி அம்மன், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார் ஆகியோர் மானூருக்கு புறப்பட்டனர். அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு, நெல்லையப்பர் ஜோதிமயமாக காட்சி அளித்து சாப விமோசனம் பெறுகிறார். இந்த நிகழ்வே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்பு பெற்றது ஆவணி மூலத்திருவிழா ஆகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் ஜோதிமயமாக காட்சி கொடுக்கும் வைபவம் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் ஆவணி மூலமண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது.

இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. மாலையில், நெல்லையப்பர், காந்திமதி அம்மன், பாண்டிய மன்னன், அகஸ்தியர், தாமிரபரணி அம்மன், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார் ஆகியோர் கருவூர் சித்தரை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு சென்று அங்கு வைத்து சாபவிமோசனம் நிவர்த்தி பெறப்படுகிறது.

இந்த விழாவில் மானூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.