கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் வெங்கடாஜலபதி கோவிலை படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

கன்னியாகுமரியில் வெங்கடாஜலபதி கோவில் கட்டுமானப்பணி இறுதி கட்டத்தை எட்டியது

கன்னியாகுமரியில் வெங்கடாஜலபதி கோவில் கட்டுமானப்பணி இறுதி கட்டத்தை எட்டியது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில், திருப்பதி வெங்கடாஜலபதி மாதிரி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்ம உற்சவம், ரதஉற்சவம், வைகுண்ட ஏகாதசி, மலையப்ப சாமி தரிசனம் உள்பட அனைத்து விழாக்களும் நடத்தப்படும். இந்த கோவில் கட்டுமானப்பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர்கள் ராதா கிருஷ்ணன் ரெட்டி, ஜெயச்சந்திரா, தொழில்நுட்ப அதிகாரி வெங்கட்ராமராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராதா கிருஷ்ணன்ரெட்டி கூறியதாவது:-

கோவில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும். இங்கு ஆகமவிதிகளின்படி 6 அடியில் ஏழுமலையான் சிலையும், 3 அடியில் பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்பாள் சிலையும் அமைக்கப்பட உள்ளது.

திருப்பதி வெங்கடேஸ்வர சிற்ப கலைக்கல்லூரியில் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் இங்கு கொண்டு வரப்படும். 56 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடிமரத்திற்கு மங்களூரில் தேக்கு மரம் தேர்வு செய்ய பணி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், திருப்பதி தேவஸ்தான துணை பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் அமர்நாத் ரெட்டி, திட்ட பொறியாளர் அப்ஷாரா ஆகியோர் பங்கேற்றனர்.