ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்தவகையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்.
இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் புனித தலத்தில் அமைந்துள்ள இக்கோவில் புகழ் பெற்ற சக்தி தலம் ஆகும். இத்தலத்தின் பெயராலேயே இப்பகுதிக்கு கன்னியாகுமரி என்ற பெயர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
பாணாசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான். கன்னிப்பெண்ணால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரத்தை பெற்ற அசுரனை அழிக்க ஆதிபராசக்தி கன்னி பகவதி வடிவில் கன்னியாகுமரியில் அவதரித்து தவம் செய்தாள். அப்போது சிவபெருமானை திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. ஆனால் உலக நன்மைக்காக நாரதர் திருமணம் நடைபெறாமல் தடுத்ததாகவும், அதனால் அம்மன் நித்திய கன்னியாகவே இருந்து பாணாசுரனை வதம் செய்து உலகை காத்ததாகவும் தல புராணம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் சிறப்பாக விழாக்கள் நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய்கிழமைகள், ஆடி களப பூஜை, ஆடி நிறை புத்தரிசி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆடி அமாவாசை தினத்தன்று வாகன பவனி நடைபெறும். களப பூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
பகவதி அம்மன் கோவிலின் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால பூஜை, பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, இரவு 8.15 மணிக்கு ஸ்ரீபலி, 8.25 மணிக்கு ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்று இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.