வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், சிவபெருமானிடம் கொண்டிருந்த தூய்மையான அன்பாலும், தன்னலமற்ற பக்தியாலும் பின்னாளில் 'கண்ணப்ப நாயனார்' என்று அழைக்கப்பட்டதோடு, சிவபெருமாளின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்பட்டார்.
மலர்களால் அர்ச்சனை, விளக்கேற்றுவது, பாடல்கள் பாடுவது எனப் பல வழிகளில் இறைவனை வழிபடுகிறோம். ஆனால், இறைவனுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்த பக்தர்களின் வரலாறு நம் மனதை நெகிழச் செய்யும். அத்தகைய ஒப்பற்ற சிவபக்தர்களில் ஒருவர்தான். கண்ணப்ப நாயனார்.
ஆகம விதிமுறைகளையோ, சாஸ்திரங்களையோ அறியாதவராக இருந்தாலும், தனது தூய்மையான பக்தியால் சிவபெருமானின் அருளைப் பெற்றவர். இறைவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த அவரது பக்தி என்றும் அழியாத வரலாறாகத் திகழ்கிறது.
பொத்தாப்பி வனப்பகுதியில் பழங்குடித் தலைவராக வாழ்ந்தவர் நாகன். இவரது மனைவி தத்தை. இவர்கள் நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தனர். பின்னர் முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு திண்ணன் என்று பெயரிட்டனர். திண்ணன் சிறுவயதிலேயே வேட்டையாடுவதிலும், வில்வித்தையிலும் சிறந்து விளங்கினான்.
ஒருநாள் காட்டில் காட்டுப்பன்றியைத் துரத்திச் சென்ற திண்ணன், பழமையான சிவலிங்கம் ஒன்றைக் கண்டான். அதைக் கண்டதும் திண்ணனின் உள்ளத்தில் சிவபெருமானின் மீது ஆழ்ந்த அன்பு ஏற்பட்டது. அன்று முதல் தனக்கு தெரிந்த விதத்தில் அந்த சிவலிங்கத்தை வழிபடத் தொடங்கினான். வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியை இறைவனுக்குப் படைத்தான். தண்ணீர் கொண்டுவர பாத்திரம் இல்லாததால், அருகிலிருந்த ஓடையில் வாயால் தண்ணீரை எடுத்துவந்து சிவலிங்கத்தின் மீது ஊற்றினான்.
அவனது வழிபாடு வழக்கமான சடங்குகளிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அதில் அன்பு நிறைந்திருந்ததால் சிவபெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அந்தச் சிவலிங்கத்தை வழிபடுவதற்காக ஒரு பூசாரியும் தினமும் அங்கு வந்து கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு காலையிலும் பூஜை செய்வதற்காக அங்கு வந்தவர், சிவலிங்கத்தின் முன்னால் இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ வேண்டுமென்றே இவ்வாறு செய்வதாக நினைத்து வருந்தினார்.
பல நாட்களாக இந்த நிகழ்வு தொடர்ந்ததால் குழப்பமடைந்த அவர், சிவபெருமானிடம் இதுகுறித்து முறையிட்டார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் "எனது பக்தனின் பக்தியை குறைத்து மதிப்பிடாதே. அவனது வழிபாட்டை நாளை மறைந்து இருந்து கவனி" என்று அருளினார்.
மறுநாள் பூசாரியும் அவ்வாறே மறைந்திருந்து திண்ணனின் வழிபாட்டை கவனித்தார். அப்போது, திண்ணனின் பக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட எண்ணிய சிவபெருமான், தனது கண்ணில் இருந்து ரத்தம் வரும்படி செய்தார். அதைப் பார்த்து பதறிய திண்ணன், ரத்தத்தை துடைத்தான். ஆனால் ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது. இதையடுத்து திண்ணன், தனது கண்ணை இறைவனுக்கு கொடுக்க முடிவு செய்தான். தன் கையில் இருந்த அம்பைக் கொண்டு வலது கண்ணைப் பெயர்த்து, ரத்தம் வழிந்த சிவலிங்கத்தின் கண்ணில் வைத்தான். உடனே ரத்தம் நின்றது. இதைக் கண்டு மகிழ்ந்த அவன், இறைவனின் வேதனை தீர்ந்துவிட்டதாக எண்ணினான்.
ஆனால், சிறிது நேரத்தில் மற்றொரு கண்ணிலும் ரத்தம் வழியத் தொடங்கியது. அதைக் கண்ட திண்ணன், தன் மற்றொரு கண்ணையும் இறைவனுக்கு வழங்க தீர்மானித்தான். இரண்டாவது கண்ணை எடுத்தால், ரத்தம் வரும் கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, தனது ஒரு கால் விரலை சிவலிங்கத்தின் கண் மீது வைத்துக்கொண்டு, மற்றொரு கண்ணையும் கொடுக்கத் தயாரானார். அந்தக்கணமே சிவபெருமான், "நில், கண்ணப்பா!” என்று தடுத்தார். திண்ணனின் அளவற்ற அன்பையும் தியாகத்தையும் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரை தனது திருவடியில் சேர்த்து அருள் புரிந்தார்.
வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், சிவபெருமானிடம் கொண்டிருந்த தூய்மையான அன்பாலும், தன்னலமற்ற பக்தியாலும் பின்னாளில் 'கண்ணப்ப நாயனார்' என்று அழைக்கப்பட்டதோடு, சிவபெருமாளின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்பட்டார். இந்நிகழ்வு நடைபெற்ற இடமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி தலம் கருதப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் இங்கு வரும் பக்தர்கள், கண்ணப்பரின் அசைக்க முடியாத சிவபக்தியையும் நினைவுகூர்ந்து அவரை வழிபடுகின்றனர்.
கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், சடங்குகளைக் காட்டிலும் மனதில் நிறைந்திருக்கும் உண்மையான அன்பும், இறைவன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையுமே உயர்ந்த பக்தியாகும்.