ஆன்மிகம்

செல்வவிநாயகர், காளியம்மன், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

டி.கல்லுப்பட்டி, வையூர் மீனாட்சிபுரம், பி.தொட்டியபட்டி, செக்கானூரணி பகுதிகளில் செல்வவிநாயகர், காளியம்மன், கருப்பசாமி கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

டி.கல்லுப்பட்டியில் உள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 2 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடைபெற்று நேற்றுமுன்தினம் இரவு அம்மன்களுக்கு அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 4 மணிக்கு 4-ம் கால யாகபூஜை, கஜபூஜை நடந்தது.

காலை 6 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து 6.45 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி இந்த பகுதி பொதுமக்கள் காப்புகட்டி விரதமிருந்து, பால்குடம் எடுத்து வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல வையூர் ந.மீனாட்சிபுரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக 2 நாட்களிலும் யாகசாலை பூஜைகள் நடந்து, நேற்று காலை 8.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் புறப்பாடாகி சாலை கோபுரம், ஸ்ரீகருப்பசாமி அமர்ந்த நூதன குதிரை வாகனத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்பு ஸ்ரீகருப்பசாமிக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சூராயி அம்மன், சங்கிலி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சிவகாசி சுந்தர பட்டர், கல்யாணசுந்தரபட்டர் குழுவினர் கும்பாபிஷேகவிழா யாக பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை வையூர் ந.மீனாட்சிபுரம் பொதுமக்கள், கருப்பையாத்தேவர் பூசாரி வகையறாவை சேர்ந்த குலதெய்வ வழிபாட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.

பேரையூர் அருகே புல்லுக்கட்டை என்ற பி.தொட்டியபட்டியில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்றுமுன்தினம் காலை பேரையூர் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவில் சன்னதியிலிருந்து பெண்கள் தீர்த்தம் கொண்டுவந்தனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று நேற்று காலை 9.30 மணிக்கு தயானந்தசாமிகள் தலைமையில் கோபுர விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

செக்கானூரணியில் உள்ள பழமையான செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆறுகரை பங்காளிகள், கிராம பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக யாகசாலையில் பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு, திருப்பரங்குன்றம் கோவில் சிவானந்த பட்டர் தலைமையிலும், ராஜகுமார குருஜி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி லதா ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செக்கானூரணி போலீசார் செய்திருந்தனர்.