மக்காவை வெற்றி கொண்ட நபி முஹம்மது(ஸல்) அவர்கள், மக்காவில் சில நாட்கள் தங்கியிருந்து இஸ்லாம் பற்றிப் போதித்து, அதன் சட்டவிதிகளை எடுத்துரைத்து மக்களை நேர்வழிப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படி ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறவர்கள் தங்களின் வீடுகளிலுள்ள சிலைகளை உடைத்தெறிய வேண்டும்’ என்றதால் மக்கள் உடனே உடைத்தெறிந்தனர். சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் சிலைகளை மக்கள் உடைத்தெறிந்தனர்.
முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பிறகு மக்கள் பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தனர். மக்காவில் திரைமறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்த முஸ்லிம்கள், இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். அதுவரை நடந்த போர்களில் முஸ்லிம் படையினர் எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரத்தைத் தாண்டாத நிலை. ஆனால், ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது சில கோத்திரத்தினருக்கு கண்ணியக் குறைவாக, மானப் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக ஹவாஜின் கோத்திரத்தினருக்கு. அவர்களைப் போல் முஸ்லிம்களின் மீது அதிருப்தி கொண்ட மற்றவர்களையும் ஹவாஜினர் சேர்த்துக் கொண்டு முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த சேர்ந்தனர். மாலிக் இப்னு அவ்ஃப் நஸ் என்பவருடைய தலைமையின் கீழ் படை திரண்டது. அவர்களுடன் போரில் நல்ல அனுபவமுள்ள துரைத் என்ற ஒருவரும் சேர்ந்தார், ஆனால் அவருக்குக் கண் பார்வை தெரியாது.
படை திரண்ட இடத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்கிறதே என்று கண்பார்வையற்ற துரைத் வினவ, அது தளபதி மாலிக் இப்னு அவ்ஃப் நஸுடைய கட்டளை என்று மற்ற வீரர்கள் விவரித்தார்கள். இந்தப் போக்கை மறுத்து துரைத் “ஹவாஜின் கிளையினர் குடும்பங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களில் இருக்க வைக்க வேண்டும். அதன்பின் நாம் போரை தொடங்கி நமக்கு வெற்றி கிடைத்தால் குடும்பத்தினர் அவர்களிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவினால் அது உன்னோடு முடிந்துவிடும். அவர்களது குடும்பமும் பொருளும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்படும்” என்றார். அதனைக் கேட்க தளபதி மாலிக் மறுத்துவிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த நபி முஹம்மது(ஸல்) எதிரிகளை எதிர்க்க தம் படையைத் திரட்டினார்கள். எதிரிப்படையின் உளவாளியைப் பிடித்து முஸ்லிம்கள் கொன்றனர். முஸ்லிம்களில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்தும் மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவிலிருந்தும் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப் போகும் இடம் 'பனூ கினானா' குலத்தாரின் முஹஸ்ஸப் என்னும் பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் மக்கா குறைஷிகள் இறைமறுப்பின் மீதே நிலைத்து இருக்கப் போவதாகச் சபதம் செய்தார்கள்' என்று நினைவு கூர்ந்தார்கள். அது ஒரு ரமதான் மாதமாக இருந்தது, போருக்குப் புறப்பட்டபோது சிலர் நோன்பு நோற்றிருந்தனர், சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி(ஸல்) தம் வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களாக ஒரு பால் பாத்திரத்தைக் கொண்டு வரும்படி கூறி, மக்களைப் பார்த்து, தன் நோன்பை விட்டுவிட்டதை அறிவித்து, ‘நீங்களும் நோன்பை விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்களும் பணிந்தனர்.
முஸ்லிம் படையிலுள்ள சிலர் தம் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து “இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று இறுமாப்புடன் கூறினர். இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைந்தனர், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல்.
ஸஹீஹ் புகாரி 3:56:3051, 4:64:4277,4285.
- ஜெஸிலா பானு.