மதுரை மேல மாசி வீதியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சாமி-அம்பாள் காலை, இரவில் கற்பகம், சிம்மம், கேடயம், ரிஷபம், சப்தவர்ணம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 6-ம் நாளில் சைவ, சமய வரலாற்று கழுவேற்றல் லீலையும், மறுநாள் பிரதோஷம் அன்று பிட்சாடணர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இரவு சப்தவர்ணத்தில் சாமி-அம்பாள் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து மறுநாள் 10-ம் திருநாளில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.