ஆன்மிகம்

மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோவில் வரலாறு

இத்தலத்தில் கருடாழ்வார் பெண் வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில் இந்தியாவில் உள்ள தொன்மையான வைணவ திருக்கோவிலில் ஒன்றாகும். இக்கோவில் தட்சிண துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

துவாபர யுகத்தில் கண்ணனின் அவதாரக் காட்சியைத் தரிசிக்க கோபிலா மற்றும் கோப்ரளய முனிவர்கள் துவாரகைக்குச் சென்றனர். ஆனால், பகவான் பூவுலகை நீத்ததை அறிந்து வருந்தினர். நாரதரின் அறிவுரைப்படி, அவர்கள் மன்னார்குடிக்கு வந்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த கண்ணன், முப்பத்தி இரண்டு வகையான திருக்கோலங்களில் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயகக்கர், விஜயராகவ நாயக்கர், செண்பகமன்னர் நாயக்கர் போன்றோர்களால் பிரகாரங்கள் கோபுரங்கன் மதில்கள் போன்றவை கட்டப்பெற்று ஏக்கர் பரப்பளவில் மூன்று உயர்ந்து அமைக்கப்பட்டது. ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும்.

கோவில் அமைப்பு

இத்திருக்கோவில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான திருக்கோவிலாகும். 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோவிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோவிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள், 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்டது. இக்கோவிலின் அருகில் கிருஷ்ண தீர்த்த குளமும் ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கெருட ஸ்தமபம் மற்றும் ராஜகோபுரம் மன்னார்குடின் அடையாளமாக மன்னார்குடி நகராட்சியின் சின்னமாகவும் உள்ளது.

சிறப்பு

இத்தலத்தில் கருடாழ்வார் பெண் வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி மாதம் நடைபெறும் 18 நாட்கள் பிரும்மோற்சவம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பெரிய உற்சவமாக கொண்டாடப்படுகிறது.

நடைதிறந்திருக்கும் நேரம்

காலை 06:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை.