திருப்பதி மலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. வைகுந்தம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 76, 464 பேர் தரிசனம் செய்தனர். 36,913 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.27 லட்சம் லட்டு விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி மலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக தொடர்ந்து குடிநீர், டீ, காபி, பால் மற்றும் அன்னப் பிரசாதங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.