திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகைகளில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வந்ததால் விஐபி பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேரடியாக வரும் விஐபிகளுக்கு மட்டும் தரிசனம் வழங்கப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. திருப்பதியில் வெயில் அளவு அதிகரித்து காணப்படுவதால் தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மோர், குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 91,005 பேர் தரிசனம் செய்தனர். 36 257 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.