குருநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி. 
ஆன்மிகம்

குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

அந்தியூர் புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

மாலை மலர்

அந்தியூர் புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குதிரை சந்தையும், மாட்டுச்சந்தையும் 4 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குருநாதசாமி கோவிலின் ஆடி தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அப்போது பெருமாள், காமாட்சியம்மன், குருநாதர் ஆகிய சாமிகள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் கோவிலின் மடப்பள்ளியில் இருந்து வனக்கோவிலுக்கு மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களால் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இதையடுத்து பெருமாள், காமாட்சியம்மன், குருநாதர் ஆகிய சாமிகள் வெள்ளிக்கவச அலங்காரத்துடன் மீண்டும் புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.

திருவிழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வருகிற 26-ந் தேதி காலை 9 மணிக்கு வனக்கோவிலில் கொடியேற்று விழா நடக்கிறது.

இதில் உயரமான கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி வன பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளும் பெருமாள், காமாட்சி, குருநாத சாமிகள் புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து வனக்கோவிலுக்கு பக்தர்கள் சுமந்துகொண்டு செல்வார்கள். அப்போது பக்தர்கள் ரோட்டில் படுத்துக்கொள்ள அவர்களுக்கு மேல் சாமிகளின் சப்பரங்கள் கொண்டு செல்லப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி குருநாதசாமி எழுந்தருளும் சுமார் 60 அடி உயர மகமேரு தேர், புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து வனக்கோவில் வரை முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்படும்.

அன்று முதல் குதிரை, மாட்டு சந்தைகளும் தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகளும், மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். 4 நாட்கள் நடக்கும் பிரமாண்டமான சந்தைக்கு ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்படும்.

வருகிற 16-ந் தேதி நடைபெறும் பால்பூஜையுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு பி.ஜானகிராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.