ஆன்மிகம்

கோவிலில் வழிபாட்டின்போது கடைப்பிடிக்க வேண்டியவை

கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது வேகமாக நடக்கக்கூடாது.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்றாலும் அவனை வழிபடுவதற்கு என அமைக்கப்பட்ட புனித இடமே, கோவில் ஆகும். மனதை ஒரு முகப்படுத்தவும், ஆன்ம பலத்தை பெறவும் கோவில்கள் சிறந்த இடங்களாக உள்ளன. மன அமைதி வேண்டியும், இறை அருளை பெறவும் கோவிலுக்கு செல்லும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.

* கோவிலுக்கு செல்லும்போது குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

* சமய குறியீடுகளை (திருநீறு, சந்தனம், குங்குமம்) அணிந்துகொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

* கோவில் கோபுரத்தை பார்த்து இரண்டு கைகளையும் உயர்த்தி கும்பிட வேண்டும்.

* சிவன் கோவில் என்றால் நந்தி பகவானை வழிபட்ட பிறகே சிவபெருமானை வழிபட வேண்டும்.

* விநாயகரை வழிபடும்போது, இரு கைகளையும் தலையில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வணங்க வேண்டும்.

* ஒவ்வொரு சன்னிதியிலும் அந்தந்த இறைவனுக்கு ஏற்ற பாடல்களையோ அல்லது மந்திரத்தையோ சொல்லி வழிபடுவது சிறந்தது.

* மந்திரங்கள், துதிப்பாடல்கள் தெரியாதவர்கள், அந்த சன்னிதியில் உள்ள தெய்வத்தின் திருநாமத்தை சொல்லி வழிபடலாம்.

* பிரகாரத்தை சுற்றி வரும்போது வேகமாக நடக்கக்கூடாது.

* கோவிலில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

* கோவிலுக்கு உள்ளே தேவையில்லாமல் உரக்க பேசக்கூடாது.

* கோவிலில் இருந்து வீட்டிற்கு திரும்பியதும் உடனே குளிக்கக்கூடாது.