ஆன்மிகம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மாலை 6 மணிக்கு வடக்கு வீதியை வந்தடையும்.

சோழ சாம்ராஜ்யத்தின் 5 தலைநகரங்களில் ஒன்றாக திருவாரூர் இருந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

அதுமட்டுமின்றி, தேவார பாடல் பெற்ற 274 கோவில்களில் 150-வது தலமாகவும், காவிரி தென்கரை தலங்களில் 87-வது கோவிலாகும் திகழ்கிறது.

இங்குள்ள மூலவர் தியாகராஜர், அம்பாள் கமலாம்பிகை என அழைக்கப்படுகின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, ஆடிப்பூர விழா, பங்குனி உத்திர விழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது உண்டு.

அவற்றுள் பங்குனி உத்திர பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா கடந்த 4-ந்தேதி விநாயகர் வழிபாடு, தல புனிதமாக்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை குண்டையூரில் இருந்து பூதம் நெல் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், 5-ந்தேதி காப்பு கட்டுதல், முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

பின்னர், 6-ந்தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பூக்கள் தூவி பக்தி கோஷம் எழுப்பினர்.

விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (சனிக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர், இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு காலை 9.05 மணிக்கு ஆழித்தேரோட்டம் தொடங்கியது.

ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா.. தியாகேசா...’ சரண கோஷம் விண்ணதிர எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர். முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டது. ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

தேரின் முன்பு சிவனடியார்கள் பஞ்சவாத்தியங்கள், சிவகணங்களை இசைத்த வாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மாலை 6 மணிக்கு வடக்கு வீதியை வந்தடையும்.

ஆழித்தேரோட்டதை முன்னிட்டு சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சு, நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருந்தனர்.

திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தேரோடும் வீதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தேரோடும் வீதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால் ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டது.