ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் இருக்கும் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் 27 பெருமாள்கள் கருடசேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தஞ்சையில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவிலில் 92-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 92-ம் ஆண்டு கருட சேவை வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் இருந்து 27 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர், அங்கிருந்து தஞ்சை நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றப்பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரெங்கநாதர், விஜய ராமர், கோவிந்தராஜ பெருமாள், ஜனார்த்தன பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழ கோதண்டராமர், கீழ சிங்கபெருமாள், பூலோக கிருஷ்ணர், படித்துறை வெங்கடேசப்பெருமாள், பஜார் ராமர் கோவில் உள்பட 27 கோவில்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.
இந்த 27 கருட சேவையை தரிசித்தால் 4 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், கருட சேவை தரிசனம் சகல தோஷநிவர்த்தி தரும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இந்த கருட சேவையின்போது பக்தர்கள் பெருமாள்களுக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். கருட சேவைக்கு முன்னர் பக்தர்கள் பாடல்களை பாடியவாறு சென்றனர். பின்னர், பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர்.
இந்த கருட சேவையில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) 18 நவநீத சேவை வைபவமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளன.