ஆன்மிகம்

ராஜயோகம் கிடைக்க அருள்செய்யும் கஜலட்சுமி

அஷ்ட லட்சுமிகளுள் ஒருவர், கஜலட்சுமி. தேவர்களும் அசுரர்களும் இணைந்து, அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டவள், இந்த தேவி. அவள் தோன்றும்போது இருபுறம் யானைகள் வந்து அபிஷேகம் செய்தன. இதனால் இவளை 'கஜலட்சுமி' என்கின்றனர். 'கஜ' என்றால் 'யானை' எனப் பொருள். பொதுவாக பெரும்பாலான பெருமாள் ஆலயங்களில், புடைப்புச் சிற்பமாகவோ, ஓவியமாகவோதான் கஜலட்சுமி காட்சி தருவார். ஆனால் மதுரை மதனகோபால சுவாமி கோவிலில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார், இந்த தேவி.

மதுரை மேல மாசி வீதியில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வீற்றிருக்கும் கஜலட்சுமி தாயார் வழிபாடு மிகவும் விசேஷமானது. இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் கஜலட்சுமிக்கு என்று தனிச்சன்னிதி அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவ்வாலய மூலவரான மதன கோபால சுவாமி, சிவபெருமானின் தியானத்தின்போது ஏற்பட்ட வெப்பநிலையை குளிரவைத்தவர் என்ற ஆன்மிக வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்.

மூலவரான மதனகோபால சுவாமி (கிருஷ்ணர்) கையில் புல்லாங்குழலுடன், சத்யபாமா மற்றும் ருக்மணி சமேதராக அஷ்டாங்க விமானத்தின் கீழ் விஸ்வரூப கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதிக்கு பின்புறம் உள்ள பிரகாரத்தை வலம் வரும்போது மேற்கு பகுதி பிரகாரத்தில் கஜலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார்.

இந்த கஜலட்சுமி தாயார் தன்னுடைய நான்கு கரங்களில் இரண்டில் தாமரை மலர் தாங்கியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைக் காட்டியும் அருள்பாலிக்கிறார். அமர்ந்த கோலத்தில் உள்ள இந்த அன்னை செந்நிற ஆடை அணிந்துள்ளார். இந்த கஜலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும் மற்றும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறையும். அதோடு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

திருமகளின் எட்டாவது வடிவமான கஜலட்சுமியை மனமுருகி வழிபடுவதன் மூலம், வறுமை நீங்கி, ராஜ யோகம் கிட்டும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், பணக் கஷ்டங்கள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கவும் இத்தலத்து கஜலட்சுமி தாயாரை வழிபடுகின்றனர். கடினமான சோதனைகளை எதிர்கொள்ளும் மனதிடத்தை, இந்த கஜலட்சுமி வழிபாடு வழங்கும்.

வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை, மாதத்தோறும் வரும் பவுர்ணமி மற்றும் ஆவணி மாத வளர்பிறை தசமி திதி (கஜலட்சுமி விரத நாள்) ஆகிய நாட்கள், கஜலட்சுமியை வழிபட சிறப்பான நாட்கள் ஆகும். அன்றைய தினம் கஜலட்சுமி சன்னிதியில் நெய் தீபமேற்றி, தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். வழிபாட்டின்போது 'ஸ்ரீகஜ லட்சுமி ஸ்தோத்திரம்' அல்லது அன்னையின் மூல மந்திரங்களை 108 முறை உச்சரிப்பது நல்லது.

ஆவணி மாத வளர்பிறை தசமி திதி அன்று, தேவலோக யானைகள் அனைத்தும் ஒன்றுகூடி நீராடி, கஜலட்சுமி தாயாரை வழிபட்டதாகப் புராணங்கள் குறிப்பிடுகிறது. அன்றைய தினம் கஜலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று வகை செல்வங்களும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். நம்முடைய ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் நாம் மனதார அன்னை கஜலட்சுமியை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கி செல்வவளம் பெருகும்.

கஜலட்சுமி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தீய எண்ணம் ஒழிந்து கருணையே வடிவமாக ஞானம் பிறக்கும். கஜலட்சுமி தாயார் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலைப்படிக்கு மேல் அமர்ந்து உள்ளதாக ஐதீகம். வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில் இருப்பதும் 'கஜலட்சுமி' தாயார்தான். தினமும் வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றுவதன் மூலம் ராஜயோகம் வந்து சேரும்.

அமைவிடம்

மதுரை மாநகரின் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் கூடல் அழகர் பெருமாள் கோவில் மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களும் இதன் அருகில் உள்ளன.

SCROLL FOR NEXT