தோஷ பரிகாரங்கள்

ஏழில் சூரியன் இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது. இவர்கள் பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள்.

கோபம் மற்றும் உஷ்ணத்திற்கு காரககிரகமானவர் சூரியன், ஒருவரின் சமூக மதிப்பையும் நிர்வாகத் திறமையையும் கனவுகளையும், லட்சியங்களையும் பற்றி கூறும் கிரகமாகும். ஏழில் சூரியன் அமர்ந்தவர்கள் தனது வாழ்க்கைத் துணையை பற்றிய மிகைப்படுத்தலான பகல் கனவுகளை கண்டு ஒரு கோட்டை கட்டி சாம்ராஜியம் நடத்துவார்கள்.

இவர்களுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாக இருக்கும். தன் கனவுக் கற்பனை கோட்டையில் வசிக்கும் வாழ்க்கையே கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். அழகு, படிப்பு, பொருளாதாரம், உத்தியோகம், கவுரவம், அந்தஸ்து என பல கனவுகள் இருக்கும். இதில் சிறு குறை இருந்தாலும் திருமணம் கேன்சல் தான். இவர்கள் பல வரனை பார்த்து ஒதுக்குவார்கள்.

அதனால் எளிதில் திருமணம் நடக்காது. இதனால் திருமணத் தடை அதிகரிப்பதுடன் திருமணத்திற்குப் பிறகு வாழ்வில் குறிப்பிட்ட சில ஆண்டு காலங்கள் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமலே இருக்கும் .கோப உணர்வு மிகுதியால் அடங்கிப் போவதில் சிரமம் மிகும்.

கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தந்தை வழி முன்னோர்கள் சிவன் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், அரசியலில் ஊழல் செய்த குற்றம் , குடும்ப உறுப்பினர்களை முறையாக நிர்வகிக்காத குற்றம் மற்றும் தந்தையை அவமதித்த குற்றத்தின் பதிவு இருக்கும்.

பரிகாரம்

ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஒரையில் 6 வாரம் பசும் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். திருமணம் முடியும் வரை சிவன் கோவில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் வாங்கி தர வேண்டும். ஆறு அரசு அதிகாரிகளுக்கு ஆறு வாரம் சாம்பார் சாதம் தானம் தர வேண்டும்.