ஆன்மிகம்

தடைகளை அகற்றி வெற்றி அளிக்கும் தூர்வாஷ்டமி வழிபாடு

தூர்வாஷ்டமி அன்று, விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பானது.

தூர்வாஷ்டமி

ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தை அருகம்புல் பிடித்துள்ளது. அருகம்புல் இல்லாமல் விநாயகர் வழிபாடு முழுமை பெறாது என்றும் கூறுவர். பூஜைக்காக பயன்படுத்தப்படும் இந்த அருகம்புல்லை போற்றி வழிபடும் நாளாக 'தூர்வாஷ்டமி' உள்ளது.

அருகம்புல் அஷ்டமி

ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தினம் 'தூர்வாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. அருகம்புல்லை 'தூர்வை' என்று கூறுவர். இந்நாளை 'அருகம்புல் அஷ்டமி' என்றும் அழைப்பர். அருகம்புல்லை லட்சுமி சொரூபமாக பாவித்து வழிபட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி மதியம் முதல் 19-ந் தேதி மதியம் வரை தூர்வாஷ்டமி வருகிறது.

விநாயகர்

தூர்வாஷ்டமி அன்று, விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பானது. மேலும் பூஜையறையில் ஒரு தாம்பாளத் தட்டின் மேல் அருகம்புல்லை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும். பழங்கள், மலர்கள், அரிசி, தயிர் படைத்து, தீபம் காட்டி வழிபட வேண்டும்.

இந்நாளில் விரதம் இருந்து விநாயகரையும், சிவபெருமானையும் வழிபடுவது வழக்கம். தூர்வாஷ்டமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விரதமாக கருதப்படுகிறது.

புத்திர பாக்கியம் அருளும் தூர்வாஷ்டமி

விரதம் இருப்பவர்களுக்கு திருமண வாழ்வு சிறப்பாகவும், அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். தடைகள் அகன்று வெற்றி கைகூடும். புத்திர பாக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். தூர்வாஷ்டமி நாளில் ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற அளவு உதவிகளையும், தானங்களையும் செய்தால் புண்ணியம் பெருகும்.

SCROLL FOR NEXT