ஆன்மிகம்

அர்ச்சுனனின் ஆணவத்தை அகற்றிய மூதாட்டியின் பக்தி

கிருஷ்ணர் விக்ரகத்திற்கு பூஜை செய்த பிங்கலை, அந்த கத்திகளுக்கும் சேர்த்து பூஜை செய்தார்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர் மீது, பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் கொண்டிருந்த அன்பு அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே அன்பால் ஒரு சமயம் அர்ச்சுனனுக்கு சிறு ஆணவம் ஏற்பட்டது. அர்ச்சுனனின் அந்த ஆணவத்தை அகற்ற, கிருஷ்ணர் புரிந்த ஒரு லீலையைப் பார்ப்போம்.

பாரதப் போரில் வெற்றி பெற்ற அர்ச்சுனன் மகிழ்ச்சியில் இருந்தான். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்தவர், கிருஷ்ணர். “கடவுளான கிருஷ்ணரே என் அருகில் தான் இருக்கிறார். இதனால் என் பக்தியே சிறந்தது. கிருஷ்ணர் மீது என்னை விட அதிக பக்தி யாராலும் செலுத்த முடியாது" என்று அர்ச்சுனன் நினைத்தான். அர்ச்சுனனின் மன எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர், அவனது ஆணவத்தை அகற்ற முடிவு செய்தார்.

அதன்படி கிருஷ்ணர், அர்ச்சுனனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றார். அங்கு கிருஷ்ணர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட பிங்கலை என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். கிருஷ்ணரும், அர்ச்சுனனும் பெண்ணாக மாறி, அவளது வீட்டிற்கு சென்றனர்.

கிருஷ்ணர், "தாயே! நாங்கள் வெகுதொலைவில் இருந்து வருகிறோம். மிகவும் களைப்பாக இருக்கிறது. சற்று நேரம் இங்கு ஓய்வெடுத்து செல்லலாமா?” என்று கேட்டார். மூதாட்டியும், அவர்களை அன்போடு வரவேற்றார். “நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்ததும், உணவு அருந்திவிட்டு செல்லுங்கள்” என்றாள். வீட்டில் உள்ள பூஜை அறையில் கிருஷ்ணர் விக்ரகம் இருந்தது. அதன் அருகில் சிறிதாகவும், சற்று பெரிதாகவும், பெரிதாகவும் என மூன்று கத்திகள் இருந்தன.

கிருஷ்ணர் விக்ரகத்திற்கு பூஜை செய்த பிங்கலை, அந்த கத்திகளுக்கும் சேர்த்து பூஜை செய்தார். இதைப் பார்த்த கிருஷ்ணர், "தாயே! கிருஷ்ணர் விக்ரகத்தோடு மூன்று கத்திகளுக்கும் பூஜை செய்கிறீர்களே.. அந்த கத்திகள் எதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன” என்று கேட்டார்.

“கிருஷ்ணரை கொடுமை செய்த மூன்று விரோதிகளை கொல்ல வேண்டும். அதற்காகதான் மூன்று கத்திகளை வைத்து பூஜை செய்கிறேன்” என்றாள், மூதாட்டி. கிருஷ்ணர், “யார் அந்த மூன்று விரோதிகள் தாயே" என கேட்டார். அதற்கு குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் ஆகிய மூவரும்தான் என்றாள், மூதாட்டி. இதைக் கேட்டதும், அர்ச்சுனனுக்கு தூக்கிவாரி போட்டது.

மேலும் பிங்கலை, குசேலனை கொல்ல சின்ன கத்தியும், பாஞ்சாலியை கொல்ல நடுத்தர கத்தியும், அர்ச்சுனனை கொல்ல பெரிய கத்தியும் வைத்திருப்பதாக கூறினாள். உடனே கிருஷ்ணர், "அந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள்" என கேட்டார்.

அதற்கு பிங்கலை, கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவர். அவருக்கு குசேலன் தவிட்டு அவலை கொடுக்கலாமா? அந்த அவல், என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா! இதுகூட தெரியாமல் குசேலன், கிருஷ்ணருக்கு அவல் கொடுத்தான்.

துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர், அஸ்தினாபுரத்தில் இருந்த பாஞ்சாலிக்கு புடவைகளை வாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனனின் கை வலித்து களைப்புற்றான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே இப்படி என்றால், புடவையை வாரி வழங்கிய கிருஷ்ணரின் கைகள் எவ்வளவு வலித்திருக்க வேண்டும் என்று கோபமாக கூறினாள், பிங்கலை.

இதைக் கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், "மூன்றாவது கத்தி அர்ச்சுனனுக்கு என்று சொன்னீர்களே. ஆனால் அர்ச்சுனன், கிருஷ்ணர் மீது அதீத பக்தி கொண்டவன் தானே” என்றார். அதற்கு பிங்கலை, உண்மையான பக்தன் என்றால் கிருஷ்ணரை கை வலிக்க தேரோட்ட சொல்வானா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்” என்றாள்.

இதைக் கேட்டதும் அர்ச்சுனன் மேலும் பதற்றம் அடைந்தான். அதைப் பார்த்த கிருஷ்ணர், சிரித்துக்கொண்டே பிங்கலையிடம் "தாயே! குசேலனிடம் அவலை தவிர வேறு பொருள் இல்லை. அவன் அன்பினாலேயே அவலை அளித்தான். பாஞ்சாலிக்கு புடவையை வாரி கொடுத்ததால் கிருஷ்ணரின் கை வலித்திருக்கும். ஆனால் ஒரு பெண்ணின் மானம் பெரிதல்லவா. எனவே அவர்களை மன்னியுங்கள்” என்றார். உடனே பிங்கலையும், அவர்களை மன்னிப்பதாக கூறி இரண்டு கத்திகளையும் தூக்கி வீசினார்.

ஆனால், போரில் வெற்றி பெறுவதற்காக சுயநலத்துடன் கிருஷ்ணரை தேரோட்ட செய்த அர்ச்சுனனை மன்னிக்கவே மாட்டேன் என்றாள். கிருஷ்ணர், "நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் கிருஷ்ணரின் மனம் கவர்ந்தவன், அர்ச்சுனன். அதனால் தான் கை வலியையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணர் தேரோட்டினார். நீங்கள் அர்ச்சுனனை கொன்றுவிட்டால், நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார்" என்றார்.

சற்று யோசித்த பிங்கலை, உண்மைதான். கிருஷ்ணர் வருந்தும்படி எந்த செயலையும் செய்யமாட்டேன். நான் அர்ச்சுனனையும் மன்னித்துவிட்டேன் என்று சொல்லி மூன்றாவது கத்தியையும் தூக்கி எறிந்தாள். இதைப் பார்த்த அர்ச்சுனனின் ஆணவம் அழிந்தது. பின்னர், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கி அங்கிருந்து புறப்பட்டான்.

SCROLL FOR NEXT