ஆன்மிகம்

திருப்பதியில் 3 கி.மீ வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, டீ, காபி, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை என்பதால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தினந்தோறும் சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரடி இலவச தரிசன காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிவதால் தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் பாதி பேர் முடி காணிக்கை செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 84,468 பேர் தரிசனம் செய்தனர். 40,203 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.22 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, டீ, காபி, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் உடல்நலம் பாதித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.