ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் கூட்டம்- 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் நேற்று 97,561 பேர் தரிசனம் செய்தனர். 57,780 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்துள்ளனர். திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. வைகுந்தம் அறைகள், நாராயணகிரி கொட்டைகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இதனால் பாடா கங்கம்மா கோவில் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர். கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வரலாறு காணாத அளவில் நேற்று ஒரே நாளில் 97 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏழுமலையானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும் போது பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது கிடையாது. இருப்பினும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு பூஜை நேரத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடும் வெயில் காரணமாக பக்தர்கள் பாதிப்பு அடையாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பால், மோர், உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பக்தர்கள் வாகனங்களில் தரிசனத்திற்கு வந்ததால் அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர்.

இந்த ஒரே மாதத்தில் 4-வது முறையாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் நேற்று 97,561 பேர் தரிசனம் செய்தனர். 57,780 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.