திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாள் காரணமாக வைகுண்டம் காத்திருப்பு அறைகளையும் தாண்டி, ஷீலா தோரணம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் நேரடி இலவச சர்வ தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-வது நாளாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.
காத்திருப்பு அறைகளை தாண்டி ஷீலா தோரணம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 90,130 பேர் தரிசனம் செய்தனர். 38,075 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.24 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.