இந்தியா பல கலாசாரங்களை உள்ளடக்கியது என்பதற்கு தீபாவளித் திருவிழாவே மிகச் சிறந்த உதாரணம். இந்தியா மட்டுமின்றி, நேபாளம், மியான்மர், மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்தத் திருவிழா வெவ்வேறு ஆன்மிக மரபுகளுடனும், பாரம்பரிய முறைகளிலும் கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் தீபாவளி அமாவாசை நாளில் காளி தேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காளி பூஜையின்போது, வீடுகளிலும் வழிபாட்டுப் பந்தல்களிலும் விளக்குகள் ஏற்றி, அன்னையை வழிபடுகிறார்கள்.
குஜராத்தில் செல்வச் செழிப்பை வரவேற்கும் பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது. வணிகர்கள், தங்களுடைய புதிய கணக்குப் புத்தகங்களை வைத்து லட்சுமி, விநாயகரை வழிபடும் 'சோப்டா பூஜன்' என்ற சடங்கை பின்பற்றுகின்றனர்.
புதிய சொத்துக்கள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, கடைகள் திறப்பது, திருமணம் செய்வது போன்ற நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். தீபாவளிக்கு அடுத்த நாள் குஜராத்தி புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் 'ஹரிகதா' நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன. இதில் 'ஹரி' எனப்படும் விஷ்ணுவின் பெருமைகளும், புராணக் கதைகளும் இசையுடன் எடுத்துரைக்கப்படுகின்றன. நரகாசுரனை வதம் செய்ததில் கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நம்பப்படுவதால், அவரைக் குறிக்கும் வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு வழிபாடு நடத்துகின்றனர். மேலும், அன்றைய தினத்தில் எருமை மாட்டை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்கும் தனித்துவமான பாரம்பரியமும் பின்பற்றப்படுகிறது.
கர்நாடகாவில் தீபாவளிப் பண்டிகை மூன்று நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான ஆஸ்வீஜ கிருஷ்ண சதுர்த்தசி அன்று மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து பண்டிகையைத் தொடங்குகின்றனர். நரகாசுரனை வதம் செய்த பிறகு, தனது உடலில் படிந்திருந்த ரத்தத்தை நீக்குவதற்காக கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்துக் குளித்ததாக ஐதீகம். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் எண்ணெய்க் குளியல் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள், மன்னர் மகாபலியுடன் தொடர்புடைய ‘பலி பாட்யா' என்ற விழா கொண்டாடப்படுகிறது.
பீகாரில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, வீட்டில் உள்ள எதிர்மறைத் தன்மைகளை அகற்றி, செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் ஒரு மரபு பின்பற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மரக்கொம்பில் துணியைச் சுற்றி, அதைப் பெரிய தீப்பந்தம் போல ஏற்றி, வீட்டின் வாசலில் இருந்து வெளியே வீசுகின்றனர். இதன் மூலம் மூதேவியை வீட்டிலிருந்து வெளியேற்றுவதாக நம்பப்படுகிறது. பின்னர், வீடு முழுவதும் அழகிய விளக்குகளை ஏற்றி, மகாலட்சுமியை வரவேற்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.