கிறிஸ்துமஸ் பண்டிகை 
ஆன்மிகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்கு தந்தை வைத்து, திருப்பலி நடத்துகிறார்.

இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம், போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கும், நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கும் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடக்கிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. முன்னதாக மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயத்தில் ஏசு பிறப்பு குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது.