ஆன்மிகம்

சித்திரகுப்தர் வரலாறு

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான்.

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெரு மான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான்.

இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த சிவபெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் இவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் இவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.

பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே, இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு இவரை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் இவரை புகச் செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார்.

இனிமேல் சித்திரகுப்தன் உன்னுடனே, உன் தளபதி எமனின் உதவியாளனாக இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என எமனுக்கு யோசனை சொல்லும் கவுரவத்தையும் கொடுத்தார்.