ஆன்மிகம்

சித்ரா பவுர்ணமி... பாவங்களை போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு

தீய செயல்களை தவிர்த்து, நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே சித்ரா பவுர்ணமியின் முக்கிய நோக்கம் ஆகும்.

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை தான் 'சித்ரா பவுர்ணமி' என்று சிறப்பிக்கிறோம். சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்சம் பெற்றும், சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சந்திரன் முழுமை அடைந்தும் காணப்படுகிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று மேற்கொள்ளும் தெய்வ வழிபாடுகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, இறப்புக்கு பிறகு சொர்க்கம் செல்ல வேண்டுமா அல்லது நரகம் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பவர், சித்ரகுப்தன். இத்தகைய சிறப்புமிக்க சித்ரகுப்தன், சித்ரா பவுர்ணமி நாளில் தான் அவதரித்ததாக நம்பப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தனை வழிபட்டால் செய்த பாவங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள். சித்ர குப்தனின் பிறப்பு குறித்து பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

ஒரு சமயம் கயிலாயத்தில் இருந்த பார்வதி தேவி விளையாட்டாக ஒரு அழகிய ஆண் குழந்தையின் சித்திரத்தை வரைந்தார். அப்போது அங்கு வந்த சிவபெருமானிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதி தேவி காட்டினார். அந்த ஓவியத்தை பார்த்தவுடன், வேலைப்பளு காரணமாக தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்க எமதர்மன் வேண்டிக்கொண்டது சிவபெருமானுக்கு நினைவில் வந்தது. உடனே தனது மூச்சுக்காற்றை செலுத்தி, அந்த ஓவியத்தில் இருந்த குழந்தைக்கு உயிர் கொடுத்தார், சிவபெருமான்.

சிவசக்தியின் அம்சமாக சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் அக்குழந்தை 'சித்ர குப்தன்' எனப் பெயர்

பெற்றது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே கையில் எழுத்தாணி, ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். 'சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றால் 'மறைவு' என்றும் பொருள்படும். அதாவது, மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், நல்ல செயல்களையும் கவனித்து, அதற்கேற்றால் போல பாவ புண்ணிய கணக்குகளை எழுதிவைக்கிறார். எனவே, சித்ரா பவுர்ணமி நாளில் சித்ர குப்தனின் பூஜையின்போது எழுத்தாணி, கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சித்ரகுப்தன், தனது இடது காலை மடித்து, வலது காலை ஊன்றி சுகாசன நிலையில் காட்சி தருவார். அவருடைய வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஓலைச் சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் இருக்கும் கணக்கு புத்தகத்திற்கு 'அக்கிர சந்தாணி' என்று பெயர்.

சித்ரா பவுர்ணமி அன்று, புனித நதிகளில் நீராடி, விரதம் இருந்து கோவில்களுக்கு சென்று சித்ரகுப்தரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும், எம பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் கொடுத்தும், முடிந்த அளவு உதவிகள் செய்தும் சித்ரகுப்தனின் அருள் பெறலாம். சித்ரா பவுர்ணமியில் 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதம் தயார் செய்து, நிலாவின் அழகை ரசித்தபடியே நிலாச் சோறு உண்ணும் வழக்கம் உள்ளது. இது குடும்ப ஒற்றுமையையும், அன்பையும் அதிகரிக்க நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறையாகும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், நமக்கு மேலான ஒரு சக்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே தீய செயல்களை தவிர்த்து, நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே சித்ரா பவுர்ணமியின் முக்கிய நோக்கம் ஆகும்.