ஆன்மிகம்

அஷ்ட லட்சுமியின் அருளை பெற்று தரும் சித்திரை வளர்பிறை பஞ்சமி வழிபாடு

நாளை நாம் செய்யக்கூடிய தீப வழிபாடு வாராகி அம்மனின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பெற உதவும்.

சித்திரை மாதத்தின் வளர்பிறை பஞ்சமி என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.47 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6.25 மணி வரை உள்ளது. எனவே பஞ்சமி வழிபாட்டில் நாளை வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது.

பஞ்சமி திதி என்பது வாராகியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராகி அம்மனை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள். வளர்பிறை பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் வராஹியைத் தரிசிக்கலாம். விளக்கேற்றி வழிபடலாம்.

நாளை வாராகி தேவியின் மூலமந்திரம் சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அருகில் வராகி சந்நிதி அமைந்திருக்கும் ஆலயத்துக்குச் செல்லுங்கள். வழிபடுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் அமர்ந்து வாராகி அம்மனை மனதுக்குள் கொண்டு வந்து, மூலமந்திரம் சொல்லி, காயத்ரி சொல்லி, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். தீயசக்திகளை எல்லாம் அழித்து நம்மைக் காத்தருள்வாள் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

நாளை நாம் செய்யக்கூடிய தீப வழிபாடு வாராகி அம்மனின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பெற உதவும். இதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளிக்க வேண்டும். பின்னர் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றும் முன் வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு ஒரு தட்டை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை குங்குமத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி 2 பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து திரியாக போட்டு நிலை வாசலின் வலது பக்கத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.

நிலை வாசலின் இருபுறமும் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது முழுமனதோடு வாராகி அம்மனையும் குலதெய்வத்தையும் நினைத்து வீட்டில் செல்வங்கள் சேர வேண்டும், சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த தீபம் குறைந்தது 48 நிமிடமாவது எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை குளிர வைத்து விடுங்கள். ஆனால் அகல் விளக்கை அங்கு இருந்து அப்புறப்படுத்த கூடாது. அன்று இரவு வரை நிலை வாசலிலேயே இந்த அகல் விளக்கு இருக்க வேண்டும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக அகல் விளக்கை எடுத்து வைத்துவிட்டு அந்த தட்டில் இருக்கக்கூடிய மஞ்சள், குங்குமம் கலந்த தண்ணீரை வீட்டு வாசலில் எந்த இடத்தில் கோலம் போடுவோமோ அந்த இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் குலதெய்வம் மற்றும் வாராகி அம்மனின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும். நிலைவாசல் பூஜை என்பது குல தெய்வத்திற்கும் அஷ்டலட்சுமிகளுக்கும் உரிய பூஜை ஆக கருதப்படுகிறது. வளர்பிறை பஞ்சமி நாளில் நிலை வாசலில் இந்த முறையில் தீபம் ஏற்றும் பொழுது அஷ்ட லட்சுமிகளோடு குலதெய்வத்தின் அருளையும் வாராகி அம்மனின் அருளையும் பரி பூரணமாக பெற முடியும்.

மேலும் பஞ்சமி திதியன்று விரதம் மேற்கொண்டு, வீட்டில் 5 வகையான எண்ணெய் கலந்து, குத்துவிளக்கின் 5 முகங்களையும் ஏற்றி வழிபட வேண்டும். விளக்கேற்றிய பிறகு, தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப் பார்த்தபடி, உங்கள் வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ‘ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமக’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம் சொல்லி முடித்ததும், கற்கண்டு அல்லது பழங்களை நைவேத்தியமாகப் படைத்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

பஞ்சமி திதியில், வாராகி மூலமந்திரத்தையும் வாராகி காயத்ரி மந்திரம் பாராயணம் செய்து செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டி வணங்கினால் அன்னை எதிரிகளை பலமிழக்கச் செய்து அருளுவாள். துக்கத்தையும் வாட்டத்தையும் போக்கி அருளுவாள் அன்னை. வாழ்வுக்கு வழியையும் வளத்தையும் கொடுத்துக் காப்பாள் வாராகி அம்மன்.