ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 28-ந் தேதியும், மாசி வீதிகளில் தேரோட்டம் 29-ந் தேதியும் நடைபெற உள்ளன.

சித்திரை திருவிழா என்றாலே மாமதுரையில் சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் உலகப்புகழ் பெற்ற உன்னத விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

சைவ சமயம் சார்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் விழாவும், வைணவம் சார்ந்து கள்ளழகர் கோவில் நடக்கும் விழாவும் சங்கமித்து பெருவிழாவாக மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 26-ந் தேதியும், திக்கு விஜயம் 27-ந் தேதியும், மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 28-ந் தேதியும், மாசி வீதிகளில் தேரோட்டம் 29-ந் தேதியும் நடைபெற உள்ளன.

மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்த விழா நடந்தது.

இதன் அடுத்த நிகழ்வாக கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் முன்பும், ராஜகோபுரம் முன்பும் என இரு இடங்களில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டன

அப்போது, அழகரின் ஆயிரம் பொன் சப்பரத்தில் இணைக்கப்படும் யாளி திருமுகத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு, அழகர் மலை நூபுர கங்கை தீர்த்தத்தால் பூஜைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து அழகர் எழுந்தருளும் வைகை ஆறு தேனூர் மண்டபத்தின் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த ஆண்டு அழகர், 494 மண்டகபடிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். எனவே அந்த மண்டகப்படிகளிலும் ஏற்பாடுகள் தொடங்கின.

அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் வருகிற 29-ந் தேதி முதல் தொடங்குகின்றன. அன்று மாலையில் கண்டாங்கி பட்டு உடுத்தி கள்ளழகர் திருக்கோலத்தில், நேரிக்கம்பு கையில் ஏந்தி பக்தர்கள் புடைசூழவும், அதிர்வேட்டுகள் முழங்கவும் மதுரைக்கு பெருமாள் புறப்பட இருக்கிறார்.

வருகிற 30-ந் தேதி மூன்றுமாவடியில் அழகரை மதுரை மக்கள் எதிர்க்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் மே 1-ந்தேதி அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து எழுந்தருள்கிறார். இந்த கண்கொள்ளா காட்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு தரிசிப்பது வழக்கம்.

மறுநாள் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார திருக்கோலங்களில் அழகர் காட்சி அளித்தல், 3-ந் தேதி மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறுகிறது. 4-ந் தேதி மதுரையில் இருந்து அழகர் புறப்பட்டு, 5-ந் தேதி இருப்பிடம் சேர உள்ளார்.