இதற்காக அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு கொண்டப்பநாயக்கர் மண்டபத்துக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பிறகு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில்முன்பு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அங்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் ‘போய் வருகிறேன், போய் வருகிறேன்’ என்று கருப்பணசாமியிடம் கூறி கள்ளழகர் செல்லும் பக்தி பரவச நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின் அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மாலை 6.15 மணிக்கு மதுரையை நோக்கி புறப்பட்டார். அவருடன் 26 உண்டியல்கள், குடை உள்ளிட்ட பரிவாரங்கள் மற்றும் நகைப்பெட்டிகள் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் சென்றன. சாமி முன்பு பக்தர்கள் தீப்பந்தம், அரிவாள், தடி, சாட்டையுடன் சாமியாட்டம் ஆடி சென்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வழியில் உள்ள பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளினார். வழிநெடுகிலும் 433 மண்டகப்படிகளில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.