சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம். 
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாதொடங்கியது

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவ,சிவா என்ற பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, பசுக்கொடி வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத முறைப்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 8.35 மணிக்கு வேத மந்திரம் முழங்க ஆருத்ரா தரிசன விழா கொடியை தீட்சிதர்கள் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் சிவ, சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தங்கம், வெள்ளி வாகனங்களில் வெளிபிரகாரத்திற்குள் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இரவு கொடிமரம் முன்பு மத்தள பூஜைகள் நடந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் 4 ரத வீதிகளிலும் வீதிஉலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

விழாவில் இன்று(திங்கட்கிழமை) பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 31-ந்தேதி வரையில் வெவ்வெறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதிஉலா வர இருக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வர இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சிகர விழாவான ஆருத்ரா தரிசனம் 2-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

பின்னர் 3-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், 4-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.