சிதம்பரம் நடராஜர் கோவில் 
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

மாலை மலர்

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 19-ந் தேதி (நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோவிலுக்குள்ளே பூஜைகளை நடத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கொரோனா வைரஸ் பரவும் சூழல் உள்ளதாலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தக் கூடாது. மேலும் விழாவுக்கு ஊரடங்கில் இருந்து எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று நடந்த கொடியேற்ற விழாவில் 100 தீட்சிதர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வேறு யாரும்  அனுமதிக்கப்பட வில்லை.