ஆன்மிகம்

பிடாரி பத்திரகாளி கோலவிழியாக மாறிய கதை! கோலவிழி பத்திரகாளி அம்மன் கோவில் வரலாறு..

600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகோரிகள் இக்கோவில் காளியை வழிபட்டுள்ளனர்.

சென்னையின் புகழ்பெற்ற காளி கோவில் மயிலாப்பூரில் உள்ளது. கோலவிழி பத்திரகாளி அம்மன் என்று அழைக்கப்படும் இக்கோவில் மயிலாப்பூரின் கிராம தேவதையாக விளங்குகிறாள்.

மூலவர் : அருள்மிகு கோலவிழி அம்மன்

மூலஸ்தானம் : பத்ரகாளி அம்மன்.

தல விருட்சம்: மாமரம், அரச மரம்.

என்ன இது இரண்டு பெயரில் அம்மனா? என்ற கேள்வி எழலாம். அதன் வரலாற்றை வாசகர்கள் கீழே படித்து அறிந்து கொள்ளலாம்.

தல வரலாறு:

கபாலீசுவரர் கோவிலில் இருந்து சுமார் ஒரு காத தூரத்தில் கோலாவிழி அம்மன் கோவில் உள்ளது. முன்பொருமுறை பார்வதி தேவி மயிலாக இங்கு வந்து புண்ணை மரத்தடியில் தவம் இருந்தாள். தவத்தில் மனம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதிக்கு அருள இத்தலம் நோக்கி புறப்பட்டார் . வரும் வழியில் இங்கு கிராமதேவதையாக விளங்கும் பத்திரகாளியை கண்டார். பின் காளியை வணங்கி அனுமதி பெற்று மயிலாப்பூர் வந்தடைந்தார்.

சிவன் இங்கு கபாலீஸ்வரராகவும் பார்வதி கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இன்றும் கபாலீசுவரர்க்கு திருவிழா எடுக்கும் முன்னர் 1000 கலசங்கள் கொண்டு கோலவிழி அம்மனை குளிர்வித்து முதல் மரியாதைகள் செய்வித்து அனுமதி பெறுவது வழக்கமாக உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூவர் திருவிழாவில், கோலவிழி பத்திரகாளியம்மன் முன்னிலை வகித்து உலா வருவாள். அவள் பின் பஞ்சமூர்த்திகளும் நாயன்மார்களும் மற்றைய இவ்வூரின் தெய்வங்களும் புடைசூழ உலா வருவார்கள்.

வரலாற்று படிமங்கள்:

இக்கோவில் விக்கிரமாதித்தன் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறுவார். மேலும் இந்த திருத்தலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. கோவிலின் உட்பிரகாரத்தில் இந்த உற்சவரைக் காணலாம். சோழர் காலத்தைச் சார்ந்த கலைநயங்களும் இக்கோவிலில் உண்டு. 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகோரிகள் இக்கோவில் காளியை வழிபட்டுள்ளனர் என்று சித்தர்கள் வாக்கின் மூலம் அறியமுடிகிறது.

நடன காளி:

தக்கனின் யாகத்த்தை அழிக்க வந்த வீரபத்திரரும் காளியும் அதீத கோபத்துடன் தோன்றி போரிட்டனர். போரின் களிப்பில் இருவரும் ருத்ர தண்டவம் ஆடினார். இக்காட்சியே இக்கோவிலில் உள்ளது. இங்குள்ள காளி நடன காளியாக விளங்குகிறாள். இதுமட்டும் அல்லாமல் அவர்களின் நடனத்தை கண்டு விநாயகரும் உடன் நடனம் ஆடத்தொடங்கினார். அதுவே கபாலீசுவரர் கோவிலில் உள்ள நர்த்தன விநாயகர் ஆகும். மேலும் தக்கனின் யாகத்தை அழிக்க வந்த வீரபத்திரருக்கும் கோலாவிழி கோவில் அருகே தனி ஆலயம் உண்டு.

பிடாரி பத்திரகாளி கோலவிழியாக மாறிய கதை:

விக்கிரமாதித்தன் வழிபட்ட காளி, காலப்போக்கில் சுமார் 10,000 வருடத்திற்கு முன்பு அருள்மிகு பிடாரி பத்ரகாளியாக அறியப்பட்டாள். மிகுந்த கோபத்துடன் உக்கிரமாக விளங்கியதால் பழந்ததமிழர்கள் இவளை பிடாரி பத்திரகாளி என்று அழைத்து வழிபட்டு வந்தனர். இவள் இந்தியாவின் எல்லைகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள் என்று வரலாறுகள் கூறும்.

பிற்காலத்தில் வந்த ஆதிசங்கரர், அவர் செல்லும் இடம் எல்லாம் உக்கிரதெய்வங்களை குளிர்வித்து சாந்தப்படுத்தினார்.

அவ்வகையில் சென்னை பாரிஸ் கார்னர் காளி அம்மனும் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து காமாட்சி சொரூபமாக மாற்றிடவே, தற்போது காளிகாம்பாளாக உள்ளாள். இதேபோல் ஆதிசங்கரர் நடன பிடாரி பத்திர காளியின் கோபத்தை தணிக்க, அவளை அமர்ந்த நிலையில் புதியதாக ஒரு சிலை பிரதிஷ்டை செய்தார். அதுவே இப்போது காணப்படும் பத்திரகாளியின் கீழே உள்ள கோலவிழி அம்மனாகும். பக்தர்கள் இருவறையும் ஒரே கருவறையில் தரிசிக்கலாம். வரலாற்று அறிஞர்கள் கோபா-முழி-அம்மன் என்பதே மருவி கோலவிழி அம்மனாக பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.

கோவிலின் அமைப்பும் அதன் சிறப்பும்:

கி. பி. 1855-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு கண் நோய்வாய்ப்பட்டது. அவர் இக்கோவிலுக்கு வந்த்து அம்மனை பிராத்தித்து வேண்டிடவே கண் பிரச்சனை குணமாகியது.

சட்ட வழக்குகள் தொடர்பான தடைகளுக்கு இங்குள்ள கிணற்றில் பக்தர்கள் பூட்டு போடுவார். பின் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அப்பூட்டை திறப்பார்கள்.

இக்கோவிலில் ராகு கேது சன்னதிகள் உள்ளது, மேலும் அதன் பரிகாரத் தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

சப்த கன்னிகளான பிரம்மனி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, சாமுண்டி, நாகேந்திரி ஆகியவர்களும் இக்கோவிலில் உள்ளனர். அரசடி விநாயகர், ஆஞ்சநேயர் இருவர்க்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. வடக்கு திசையை நோக்கியபடி, ஒரே கருவறையில் இரண்டு மூலஸ்தானம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை உள்ளது.

இக்கோவிலில் உள்ள பத்திரகாளி, இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எட்டு கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எட்டு கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள்.

பத்ர என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாக விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல. அவளை பக்தர்கள் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும்.

திருவிழாக்கள்:

சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10-ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இங்கு நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். 

பயணம்:

சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை