திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளின் தேர்கள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரோட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 5 தேர்கள் வலம் வரும் பஞ்சரத தோரோட்டம் இன்று நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளின் தேர்கள் அனைத்தும் பட்டு வஸ்திரங்களாலும், பல வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை சரியாக 7.01 மணிக்கு முழுமுதற் கடவுளான விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விநாயகர் தேர் கோவில் 4 மாட வீதிகளில் வலம் வந்து தனது நிலையை அடைந்தது. அதன் பின்னர் அறுபடை வீடு கொண்ட வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதியில் வலம் வந்தது.
அதனை தொடர்ந்து பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேரை பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு பெரிய தேர் மாட வீதியில் வலம் வந்ததை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டு வணங்கினர். விநாயகர் தேரை கோவில் இணை ஆணையர் ஜெ.பரணிதரன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், தக்கார் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று பிற்பகல் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் உள்ளிட்ட 7 எஸ்.பி.க்கள் அடங்கிய 4 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அண்ணாமலையார் கோவில் நான்கு மாடவீதிகளிலும் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.