ராமேசுவரம் கோவில் 
ஆன்மிகம்

நாளை மறுநாள் ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்

திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் உதவி ஆணையர் ரவீந்திரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் மகாளய அமாவாசையுடன் தொடங்குகிறது. கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை மூடப்பட்டு, மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இரவில் அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.

நவராத்திரி திருவிழா

ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகாளய அமாவாசை அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவில் முதல் நாளான வருகிற 11-ந்தேதி அம்பாள் முத்தங்கி சேவையிலும் தொடர்ந்து அன்னபூரணி, மகாலட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கவுரி சிவ பூஜை, சாரதா அம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட பல்வேறு அவதாரங்களில் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான வருகிற 21-ந்தேதி கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மகரநோன்பு திடலில் அம்புஎய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் உதவி ஆணையர் ரவீந்திரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நடைதிறப்பில் மாற்றம்

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முள்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை படிகலிங்க தரிசன பூஜை நடைபெறும் என்றும், பின்னர் திருவனந்தல் பூஜையும், காலை 6 மணிக்கு பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கம்போல் பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு பின்னர் 3 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வெள்ளி தேரோட்டம் முடிந்த பின்னர் கோவில் நடையானது வழக்கம் போல் சாத்தப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT