கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் திருக்கோவில். மலை மீது அமையப்பெற்ற சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் இறைவன் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
ஒரு சமயம் தர்மதேவர், தென் பெண்ணை ஆற்றங்கரையில் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், தர்மதேவருக்கு காட்சி அளித்தார். அப்போது தர்மதேவர், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அதன்படி தர்மதேவரை காளையாக மாற்றி தன்னுடைய வாகனமாக ஏற்றுக்கொண்டார், சிவபெருமான். மேலும் தர்மதேவர், தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி, அதில் உமாதேவியுடன் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். சிவபெருமானும் ரிஷப வடிவில் 'விருஷபாசலம்' எனும் மலையை உருவாக்கி அங்கு தங்கினார்.
அந்த இடத்திற்கு உமாதேவியை அழைத்து வரவும் சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நடத்தினார். கயிலாயத்தில் பார்வதி தேவி இருக்கும்போது, சிவபெருமான் ஒளிவீசும் உடும்பு உருவம் எடுத்து அவர் அருகில் சென்றார். அந்த உடும்பை பார்த்ததும் பார்வதி தேவி, தன் தோழிகளுடன் அதைப் பிடிக்க துரத்தினார். ஆனால் அந்த அதிசய உடும்பானது அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளை கடந்து சென்றது. ஒரு கட்டத்தில் உடும்பின் வாலை பார்வதி பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமாக மாறியது.
இதற்கிடையில் பார்வதி தேவியுடன் வந்த தோழிகள், அவரை பிரிந்து காடு முழுவதும் அலைந்து திரிந்தனர். இதனால் தாகத்தால் வாடிய அவர்கள், பார்வதி தேவியை நினைத்து வேண்டினர். உடனே பார்வதி தேவி ஒரு குளத்தை உருவாக்கி அவர்களது தாகத்தை போக்கினார். பின்னர், தோழிகளுடன் பார்வதி தேவி அக்குளத்தில் நீராடினார். அப்போது அக்குளம் பச்சை நிறமாக மாறியது.
அந்த சமயத்தில் உடும்பு அருகில் இருந்த மலைமீது ஏறிச் செல்வதை கண்ட பார்வதிதேவி, அதைப் பின்தொடர்ந்தார். அப்போது, மலையில் தவம் இருந்த முத்கலன் என்ற முனிவர், அந்த உடும்பு செண்பக மரத்தில் ஏறியதைப் பார்த்து, உச்சாயணன் என்ற மற்றொரு முனிவரை அழைத்தார். அவர்கள் இருவரும் அந்த உடும்பை பிடிக்க முயலும்போது, அது மறைந்து போனது.
இதைப் பார்த்த பார்வதிதேவி, உடும்பு மறைந்ததற்கு முனிவர்கள் தான் காரணம் என்று நினைத்து அவர்கள் மீது கோபம் கொண்டார். உடும்பை பார்த்ததும் மற்றொருவரை அழைத்தவரை ஊமையாகும்படியும், அழைத்ததும் ஓடி வந்தவரை செவிடாகும்படியும், இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டார்.
சாபம் பெற்ற இருவரும் சாப விமோசனம் வேண்டி சிவபெருமானை வேண்டினர். அப்போது அங்கு தோன்றிய சிவன், “தர்மதேவருக்கு அளித்த வரத்தின்படி, உமாதேவியுடன் இங்கு தங்க வேண்டும் என்பதற்காக நான் நடத்திய திருவிளையாடலே இது. வேடுவ குலத்தில் பிறந்து, உடும்பாக என்னைக் காணும்போது உங்களது சாபம் நீங்கும்" என்று அருளினார். அதன்படி சாப விமோசனம் பெற்ற இரண்டு முனிவர்களும் இங்கு சிவபெருமானுக்கு இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.
இக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மலை மீது கோவிலை அடைய சுமார் 200 படிகளை கடந்து செல்ல வேண்டும். தெற்கு நோக்கி அமைந்த ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால், திருச்சுற்றின் வலதுபுறத்தில் ஜலகண்டேஸ்வரர் உள்ளார். இவர், தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் காட்சி தருகிறார். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இவ்வாறு 16 நாட்கள் தொடர்ந்து அவரை வழிபட்டால் விரைவில் மழை பொழியும் என்பது நம்பிக்கை.
இரண்டாம் திருச்சுற்றுக்கு வந்தால் அங்கு பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தின் இருபுறத்திலும் விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கருவறையில் மூலவர் சந்திரசூடேஸ்வரர், சூரிய - சந்திர பிரகாசத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் செவிட நாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
துர்க்கை கருவறை கோஷ்டத்தில் மகாகணபதி, ஸ்ரீகணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைக்கு இடதுபுறம் மரகதாம்பிகை அன்னை தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பிகை மூக்குத்தியுடன், பின்னல் சடை, குஞ்சத்துடன் வீற்றிருப்பது அற்புத காட்சியாகும். இவர் பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அன்னைக்கு முன்பாக ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி நாட்களில் ஸ்ரீசக்கரத்தின் முன் சண்டி ஹோமம் நடைபெறும்.
திருமாளப்பத்தி மண்டபத்தின் கிழக்கில் சந்திரன், இந்திரன், அக்னி பகவான் ஆகியோரும், தெற்கில் எமன், அறுபத்துநால்வர், சப்தமாதர்கள் ஆகியோரும் காணப்படுகிறார்கள். மேற்கில் உற்சவர், ராஜகணபதி, வருண பகவான், சரஸ்வதி, கஜலட்சுமி, வள்ளி -தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோரும், வடக்கில் குபேரர், 16 லிங்கங்கள், பஞ்சலிங்கங்கள், வீரபத்திரர், கால பைரவி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரும் தனித் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள்.
கோவிலில் இருக்கும் உற்சவ மூர்த்தி, உமாதேவி மற்றும் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தராக காட்சி அளிக்கிறார். கோவில் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக 'மரகதசரோவம்' எனப்படும் பச்சைக் குளமும் உள்ளன. கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில் காளி காம்பாள் சமேத காமாட்சீஸ்வரர் கோவிலும் உள்ளது.
இங்குள்ள சந்திரசூடேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் உடல் நோய்கள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குடும்பம் சகல ஐஸ்வர்யத்துடன் இருப்பதற்கும் பக்தர்கள் ருத்ரா அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுபவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோவிலில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பங்குனி தேர்த் திருவிழா போன்றவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் நகரின் மத்தியிலேயே சந்திரசூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.