ஆன்மிகம்

7 ஆண்டுகளுக்கு பிறகு வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 21-ந்தேதி பிரம்மோற்சவம்

உற்சவ நாட்களில் நாள்தோறும் கோவில் மயில் மண்டபத்தில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21-ந்தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் திருப்புகழ் பாடப்பெற்றதுமாகிய இக்கோவில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இங்கு 6 வாரங்கள் வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாகவும், திருப்பணி கும்பாபிஷேகம் காரணமாகவும் 7 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் வரும் 21-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 20-ந் தேதி காலை கிராம தேவதை உற்சவம், அன்று மாலை விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 21 ந்தேதி காலை கொடியேற்றம் முடிந்து சவுடால் உற்சவம், மாலையில் வெள்ளிமயில் வாகனம், 22-ந் தேதி காலையில் சூரியபிரபையும் மாலையில் சந்திரபிரபையும், 23-ந் தேதி காலையில் கேடய உற்சவம் மாலையில் ஆட்டுக்கிடா வாகனமும், 24 -ந்தேதி காலை கேடயம் மாலையில் கேடயம், 25 -ந்தேதி காலை கேடயம் மாலையில் அன்னவாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

26-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனமும் மாலையில் கேடய உற்சவமும், 27-ந்தேதி காலையில் உள்புறப்பாடு ரதமும் மாலையில் மகா அபிஷேகம், 28ந் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு மாலையில் குதிரை வாகனமும், 29-ந்தேதி காலை தல விருட்ச வாகனமும் மாலையில் கல்யாண உற்சவம் இதனைத் தொடர்ந்து பெரிய மயில் வாகன உற்சவமும், 30-ந்தேதி காலை சிறிய மயில் வாகனம் தீர்த்தவாரியும் மாலையில் புஷ்ப பல்லக்கு முடிந்து கொடியிறக்கமும் 31- ந்தேதி காலை சண்டிகேசர் வெள்ளி இடப வாகனம் மாலையில் விடையாற்றி உற்சமும் நடைபெற உள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. உற்சவ நாட்களில் நாள்தோறும் கோவில் மயில் மண்டபத்தில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.