ஆன்மிகம்

தந்தையின் மகிழ்ச்சிக்காக அரச உரிமையையும், திருமண வாழ்க்கையையும் துறந்த பீஷ்மர்!

சத்தியவதியின் தந்தை, சந்தனு மன்னரிடம் ஒரு நிபந்தனை விதித்தார்.

பெற்றோரின் மகிழ்ச்சிக்காக தங்களுடைய விருப்பங்களையும், கனவுகளையும் தியாகம் செய்யும் பிள்ளைகள் என்றும் போற்றப்படுகிறார்கள். மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதாக அவர் எடுத்த சபதம் அவரது வாழ்க்கையை மட்டுமல்லாமல், மகாபாரதத்தின் வரலாற்றையும் மாற்றியமைத்தது.

சந்தனு மன்னர்

மகாபாரதத்தில், அஸ்தினா புரத்தை சந்தனு என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் கங்காதேவியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் தேவவிரதன். நிபந்தனையின்படி கங்காதேவி, தேவ விரதனை சந்தனு மன்னரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். தேவ விரதன் சிறுவயதில் இருந்தே அறிவாற்றலிலும், வில்வித்தையிலும், போர்க்கலைகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் பெருமிதம் கொண்ட சந்தனு மன்னர், தேவவிரதன் எதிர்காலத்தில் அஸ்தினாபுரத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்வான் என்று நம்பினார்.

சத்தியவதி

ஒருநாள் சந்தனு மன்னர் வேட்டைக்காக காட்டிற்குச் சென்றபோது, யமுனை நதிக்கரையில் சத்தியவதி என்ற பெண்ணைக் கண்டார். அவளுடைய அழகிலும், பணிவான பேச்சிலும், நற்குணங்களிலும் மனதைப் பறிகொடுத்த மன்னர், அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். தனது விருப்பத்தை சத்தியவதியின் தந்தையிடம் தெரிவித்தார்.

அஸ்தினாபுரம்

ஆனால் சத்தியவதியின் தந்தை, சந்தனு மன்னரிடம் ஒரு நிபந்தனை விதித்தார். “என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைதான் அஸ்தினாபுரத்தின் அடுத்த மன்னராக முடி சூட்டப்பட வேண்டும்" என்றார். ஆனால் இதை ஏற்றுக்கொள்வது சந்தனு மன்னருக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் சத்தியவதியை திருமணம் செய்துகொள்ளும் ஆசை, மறுபுறம் மகனின் அரச உரிமை என இரண்டிற்கும் இடையில் தவித்த அவர், மன வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினார்.

தந்தையின் மகிழ்ச்சி

தனது தந்தையின் கவலைக்கான காரணத்தை அறிந்த தேவவிரதன், அவருடைய ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். சத்தியவதியின் தந்தையைச் சந்தித்த அவர், “எனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அஸ்தினாபுரத்தின் அரச உரிமையைத் துறக்கிறேன். சத்தியவதிக்குப் பிறக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் மன்னர்களாக முடிசூட்டப்படுவார்கள்" என்று உறுதியளித்தார்.

தேவவிரதன் முடிவு

தேவவிரதனின் முடிவைக் கண்டு சத்தியவதியின் தந்தை வியப்படைந்தார். இருப்பினும், எதிர்காலத்தில் தேவவிரதனுக்குப் பிறக்கும் குழந்தைகள், அஸ்தினாபுரத்தின் அரச உரிமையைக் கோரினால், தனது மகளின் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமே என்று அவர் கவலைப்பட்டார்.

சபதம்

இதை உணர்ந்த தேவவிரதன், “நான் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். எனக்கென்று வாரிசுகளும் இருக்க மாட்டார்கள். என் தந்தையின் மகிழ்ச்சிக்காகவும், அவருடைய விருப்பம் நிறைவேறுவதற்காகவும் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்” என்று சபதம் எடுத்தார். தனது இளமைக்கால ஆசைகளையும், திருமண வாழ்க்கையையும் துறந்து அவர் எடுத்த இந்தக் கடுமையான முடிவைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

பீஷ்மர்

அவரது உறுதியையும் தியாகத்தையும் கண்டு வியந்த தேவர்கள், அவரை 'பீஷ்மர்' என்று அழைத்தனர். 'பீஷ்மர்' என்ற பெயர், கடுமையான சபதத்தையும், அதன் உறுதியையும் குறிக்கிறது. தனது மகனின் தியாகத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்த சந்தனு மன்னர், பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் மட்டுமே மரணம் நிகழும் வரத்தை அளித்தார்.

சந்தனு மன்னர் - சத்தியவதி திருமணம்

இதையடுத்து, சந்தனு மன்னர் சத்தியவதியை திருமணம் செய்துகொண்டார். தந்தையின் மகிழ்ச்சிக்காக தனது அரச உரிமையையும், திருமண வாழ்க்கையையும் துறந்த பீஷ்மர், பின்னாளில் அஸ்தினாபுரத்தின் நலனுக்காக தன்னலமின்றிப் பாடுபட்டார். அவரது தியாகமும், உறுதியும் மகாபாரத வரலாற்றில் இன்றளவும் போற்றப்படுகின்றன. பீஷ்மர் எடுத்த சபதம் அவரது தந்தையின் மகிழ்ச்சிக்குக் காரணமானாலும், பின்னாளில் குரு வம்சத்தின் வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகளுக்கும் அடித்தளமாக அமைந்தது.

இன்றைய காலகட்டத்தில் சில பிள்ளைகள், பெற்றோரின் கஷ்டத்தையும், அவர்களின் விருப்பத்தையும் புரிந்துகொள்வதே கிடையாது. ஆனால் தந்தையின் விருப்பத்திற்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்த பீஷ்மரின் செயல் நமக்கு சிறந்த பாடத்தை எடுத்துரைக்கிறது. பெற்றோரின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களின் விருப்பத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதே ஒரு மகனின் கடமையாகும்.

SCROLL FOR NEXT