மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மஹத்தர்சங் பகுதியில் அமைந்துள்ளது, ஹரி ஹரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் கி.பி.11-ம் நூற்றாண்டில் சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விஷ்ணு (ஹரி), சிவன் (ஹர) ஆகிய இருவரும் வழிபடப்படுவதால் 'ஹரிஹரேஸ்வரர்' கோவில் என்ற பெயர் வந்தது.
கோவிலில், முக மண்டபம், சபா மண்டபம், சொர்க்க மண்டபம், கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளன. முக மண்டபத்தின் நுழைவுவாசலில் கல்லில் செதுக்கப்பட்ட அழகான ராம பைரவி சிற்பம் உள்ளது. சபா மண்டபத்தின் கூரையில் இரண்டு சிற்பங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. ஒன்று, கோபியர்களுடன் விளையாடும் கிருஷ்ணர். மற்றொன்று, ஐந்து வெவ்வேறு உடல்களுடன் இருக்கும் கிருஷ்ணரின் ஒற்றை முக சிற்பம்.
சொர்க்க மண்டபத்தில் நுழையும்போது, அதன் நான்கு சுவர்களிலும் இருக்கும் அழகான சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இங்கு கழுத்தில் பாம்புகளுடன் கூடிய பைரவரின் திருவுருவம் ஒன்று உள்ளது. பைரவரின் இருபுறமும் பெரிய பாம்பு சிற்பங்கள் உள்ளன. கோவிலில் இரண்டு கர்ப்பக்கிரகங்கள் உள்ளன. ஒன்றில் சிவலிங்கம் உள்ளது. மற்றொன்றில் கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் கிருஷ்ணர் உள்ளார். அவரின் காலடியில் ஒரு பசு உள்ளது.
இங்கு நடைபெற்ற அகழாய்வின்போது, ஒரு அதிசய சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லிங்கத்தில் மேற்பகுதியில் சிவபெருமானின் திருமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 359 திருமுகங்கள் காணப்படுகின்றன. இந்த சிவலிங்கம் 'பகுமுகி லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இதன் எடை சுமார் 4 ஆயிரம் கிலோ என்கிறார்கள். இந்த பகுமுகி லிங்கத்தை தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.
இந்த கோவிலுக்கு அருகில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. சோலாப்பூரில் இருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் பீமா மற்றும் சீனா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.