சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 186-வது அவதார தின விழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி சாமிதோப்பு தலைமைப்பதி சார்பில் அதற்கு முந்தைய நாள் 3-ந் தேதி திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.
அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் செந்தூர்பதியில் இருந்து நாளை காலை 6 மணிக்கு ஒரு வாகன பவனி தொடங்குகிறது. இதற்கு பூஜிதகுரு சுவாமி தலைமை தாங்குகிறார். திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. வாகன பவனி வரும் வழியில் அந்த பகுதியில் உள்ள நிழல் தாங்கலை சேர்ந்தவர்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.
அய்யா வைகுண்டசாமி சிறை வைக்கப்பட்ட திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பகுதியில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் வடக்கு வாசலில் இருந்து நாகர்கோவிலை நோக்கி மற்றொரு வாகன பவனி நடைபெறுகிறது. இதற்கு பூஜிதகுரு தங்கபாண்டியன் தலைமை தாங்குகிறார். பவனி பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவிலை வந்தடைகிறது.
2 வாகன பவனிகளும் நாகர்கோவில் நாகராஜா கோவிலை வந்தடைந்ததும், நாகராஜா திருமண மண்டபத்தில் அய்யாவழியின் மாசி மாநாடு நடக்கிறது. இதற்கு பூஜிதகுரு பையன்ராஜா தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 4-ந் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.