கடந்த 1-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 2-ந் தேதி பூதவாகன, அன்னவாகன, அதிகாரநந்தி, கிளி வாகன காட்சிகள், 3-ந் தேதி புஷ்பவிமானம் கைலாச வாகன காட்சிகள் ஆகியன நடந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில் 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர்.
இதில் விநாயகபெருமான் மூசிக வாகனத்திலும், சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், பூமிநீளாதேவி கரி வரதராஜப்பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. அப்போது வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்க சிவகன பூத வாத்தியம் இசைக்கப்பட்டது.
கோவிலிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்குர வீதி, கிழக்குரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி உலா வரும் வீதிகளில் வழிநெடுகிலும், மாவிலை, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மற்றும் நான்கு ரத வீதிகளிலும் பூரம் குடைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
7-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது, 8-ந் தேதி காலை 9 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கின்றது. 9-ந் தேதி தெப்பதேர் விழாவும், 10-ந் தேதி நடராஜர் தரிசனம் தரும் நிகழ்ச்சியும், 11-ந் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை மயில் வாகன காட்சியும் நடக்கிறது.