மணிகண்டம் அருகே யாகப்புடையான்பட்டியில் தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம். 
ஆன்மிகம்

மணிகண்டம் அருகே புனித உபகார அன்னை ஆலய தேர் பவனி

மணிகண்டம் அருகே புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலம் அருகே யாகப்புடையான்பட்டியில் புனித உபகார அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் நவநாள் திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து தினமும் மறையுரை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு 9 மணிக்கு திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வர் யூஜின், கார்மெல் சபை மாநிலத்தலைவர் அருள்ராஜ், நாகமங்கலம் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ்பிரபு ஆகியோர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் ஏசுவும், 2-வது தேரில் சூசையப்பரும், 3-வது தேரில் புனித உபகார அன்னையும் எழுந்தருளினர். வாணவேடிக்கை முழங்க மேளதாளம் இசைக்க தேர்கள் வலம் வந்தன. அப்போது, கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தன. இதை தொடர்ந்து நேற்று காலை பாதிரியார் வின்சென்ட் லாரன்ஸ் தலைமையில் திருவிழா நிறைவு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இந்த தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.