காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடந் தது. 8-ம் திருநாளன்று மாலையில் நற்கருணை பவனியும், 9-ம் திருநாளன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவில் தேர் பவனியும் நடந்தது.
10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா பாடல் திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடந்தது. விழாவில் பணகுடி, காவல்கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் எஸ்.மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.