ஆன்மிகம்

சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் அழகர் ‘மீன் துள்ளல்’ விளையாட்டு வைபவம்

சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் அழகர் இறங்கி மீன் துள்ளல் விளையாட்டு வைபவம் நடந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த வைபத்தால் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றின் அருகில் அமைந்துள்ள அழகர்கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலையில் மகாலட்சுமி, பூமாதேவி சமேதர் அழகருக்கு(சுந்தரராஜ பெருமாள்) சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

மாலை 5.30 மணிக்கு மகாலட்சுமி, பூமாதேவி சமேதராக அழகர், கோவிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு தனது தங்கை விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு பட்டு அணிவித்து மரியாதை செலுத்தினார். அழகருக்கும், துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

மாலை 6-30 மணிக்கு அழகர், அங்கிருந்து சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு எழுந்தருளினார். அங்கு அழகர் ஆற்றில் மீனுடன் விளையாடும் வைபவம் நடந்தது. வறட்சி நிலவுவதால், ஆற்றில் ஊத்து உருவாக்கி அதில் மீன்கள் போடப்பட்டு இருந்தன. அந்த மீன்களுடன் அழகர் விளையாடும் வைபத்தை முன்னிட்டு, வெற்றிலையில் சூடம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது அந்த ஊத்தில் கிடந்த மீன்கள் துள்ளிவிளையாடின. இதைத்தொடர்ந்து அழகருக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா...கோவிந்தா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து விஷ்ணுதுர்க்கை அம்மன் கோவில், சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் சார்பிலும் அழகருக்கு பட்டு ஆடை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இரவு 8 மணிக்கு அழகர் தாமிரபரணி ஆற்றில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைந்தார். அங்கு அழகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தாமிரபரணி ஆற்றில் அழகர் இறங்கி மீன் துள்ளல் விளையாட்டு வைபவம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்ததால் இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்தனர்.