ஆன்மிகம்

அட்சய திருதியை - வீடுகளில் பூஜை செய்து வழிபடும் முறை

முதலில் விநாயகரை வேண்டிக் கொண்டு பின் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள்.

அட்சய திருதியை நாளன்று அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தமாக நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி கோலமிடுங்கள். அதன் மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழை இலை ஒன்றை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசம் செய்யுங்கள்.

அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம். கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள்.

கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள்.

விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டிக் கொண்டு பின் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.

பின்னர் அவரவர் வழக்கப்படி தூப, தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோவில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்து விட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். விரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்து விட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் தொடர்பான ஆவணங்கள், பணம் இவற்றை எல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.