ஆன்மிகம்

கடன் தொல்லை போக்கும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனூர் நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, பெரிய நாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் திருக்கோவில். அகத்திய மாமுனிவர் வழிபட்ட தலங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது.

கருவறையில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 'அகம்' என்றால் 'மனம்' என்று பொருள். இத்தல இறைவன், இங்கு வரும் பக்தர்களின் மனதை நல்வழிப்படுத்துவதால், 'அகத்தீஸ்வரர்' என்று அழைக் கப்படுவதாக கூறுகிறார்கள். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகள் ருத்ராட்ச பந்தலில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆலயத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். மேலும் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாட்டின்போது, இங்குள்ள நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகிறது. திருமணத் தடைகள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில் இங்குள்ள நந்தியம்பெருமான், சிவபெருமான், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை கண்டுகளித்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்றும், தொடர்ச்சியாக 48 நாட்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபங்கள் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தஞ்சாவூரில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் உள்ளது.