ஆன்மிகம்

கவுதம முனிவரின் சாபத்தால் கல்லான அகலிகை - கருணை காட்டிய ராமபிரான்..!

ஒருநாள் கவுதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த இந்திரன், பொழுது விடிவதற்கு முன்பாகவே சேவல் கூவுவது போன்று சத்தம் எழுப்பினான்.

இறைவனின் திருவருளால் சாபங்கள் நீங்கி, வாழ்வில் நல்வழி பெற்ற கதைகள் ஏராளம். அவற்றுள், ராமபிரானின் திருவடிகள் பட்ட அடுத்தக்கணமே சாபவிமோசனம் பெற்று, துயரத்திலிருந்து விடுபட்ட அகலிகையின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது.

கவுதம முனிவர்

முன்னொரு காலத்தில் கவுதம முனிவர், தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்து வந்தார். பேரழகும், நற்பண்புகளும் நிறைந்த அகலிகை, தனது கணவரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தாள். கணவருக்கு தேவையான பணிவிடைகளைச் செய்து, அமைதியாக வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

அகலிகை

அகலிகையின் அழகைக் கண்டு மயங்கிய தேவேந்திரன், அவள் மீது தவறான எண்ணம் கொண்டான். கவுதம் முனிவர் தினமும் அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரைக்கு நீராட செல்வது வழக்கம். இதை தெரிந்துகொண்ட இந்திரன், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அகலிகையை அடைய நினைத்தான்.

இந்திரன்

ஒருநாள் கவுதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த இந்திரன், பொழுது விடிவதற்கு முன்பாகவே சேவல் கூவுவது போன்று சத்தம் எழுப்பினான். அந்த சத்தத்தைக் கேட்ட கவுதம முனிவர், பொழுது விடிந்துவிட்டது என நினைத்து, அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றார். இதை எதிர்நோக்கி இருந்த இந்திரன், கவுதம முனிவரை போன்று தோற்றத்தை மாற்றி ஆசிரமத்திற்குள் நுழைந்தான். தனது கணவர் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து, அகலிகை அவருக்கு பணிவிடை செய்தார். இதனை பயன்படுத்தி கொண்ட இந்திரன், அகலிகையுடன் தவறாக நடந்து கொண்டான்.

ஞானதிருஷ்டி

ஆற்றங்கரைக்கு சென்ற கவுதமருக்கு, இன்னும் பொழுது விடியவில்லை என்பது தெரிந்தது. ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த கவுதம முனிவர் விரைவாக ஆசிரமம் திரும்பினார். கவுதம முனிவர் ஆசிரமம் வருவதை அறிந்த இந்திரன், தன்னை பூனை உருவத்திற்கு மாற்றிக்கொண்டு ஆசிரமத்தில் இருந்து வெளியேறினான். ஆனால் அதற்குள் அங்கு வந்த கவுதம முனிவர், தனது ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்துகொண்டார்.

சாபம்

இதனால் மிகுந்த கோபம் கொண்ட கவுதம முனிவர், இந்திரனுக்கு சாபம் அளித்தார். அதேபோல், “வந்திருப்பது கணவரா, இல்லையா என்பது கூட தெரியாதா?" என்று அகலிகைக்கு கல்லாக மாறும்படி சாபம் அளித்தார். இதனால் வருந்திய அகலிகை, சாப விமோசனம் வேண்டினார். கவுதம முனிவர், "மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமர் இங்கு வரும்போது, அவரது திருப்பாதம் பட்டவுடன் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்” என்றார். இதையடுத்து அகலிகை, ராமபிரானின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள். காலங்கள் கடந்தன.

ராமர், லட்சுமணர்

முனிவர்கள் தவம் செய்து, வேள்விகள் நடத்தி வந்த கவுதம முனிவரின் ஆசிரமம், மக்கள் நடமாட்டமின்றி அமைதியில் மூழ்கியது.

ஒரு சமயம், விசுவாமித்திரர் தனது வேள்வியைப் பாதுகாப்பதற்காக ராமரையும், லட்சுமணரையும் அழைத்துக் கொண்டு பயணித்தார். வழியில் அவர்கள் கவுதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். மக்கள் நடமாட்டமின்றி இருந்த ஆசிரமத்தைக் கண்ட ராமர், முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்த இடம் இவ்வாறு இருப்பதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.

ராமபிரான் திருவடிகள்

அப்போது விசுவாமித்திரர், அந்த ஆசிரமத்தின் பின்னணியையும் அகலிகையின் சாபத்தைப் பற்றியும் ராமரிடம் எடுத்துரைத்தார். இதைக் கேட்ட ராமர், அகலிகையின் துயரத்தைப் போக்க எண்ணினார். அப்போது, ராமபிரானின் திருவடிகள் பட்டதும், கல்லாக இருந்த அகலிகை மீண்டும் தனது இயல்பான உருவத்தைப் பெற்றாள்.

மறுபிறவி எடுத்த அகலிகை

நீண்ட காலமாக சாபத்தின் பிடியில் சிக்கித் தவித்த அவளுக்கு, அந்தத் தருணம் மறுபிறவி எடுத்ததைப் போன்ற பேரானந்தத்தை அளித்தது. அகலிகையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. ராமபிரானின் கருணையை எண்ணி, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினாள். பின்னர், கவுதம முனிவரும் அகலிகையை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு ராமரின் வருகையால் அகலிகையின் நீண்டகாலத் துயரம் முடிவுக்கு வந்தது.

எத்தகைய துயரம் வந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை அகலிகையின் சாபவிமோசனக் கதை நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் கருணை கிடைக்கும்போது துயரங்கள் விலகி, இருள் சூழ்ந்த வாழ்க்கையிலும் நம்பிக்கை எனும் ஒளி பிறக்கும்.

SCROLL FOR NEXT