ஆன்மிகம்

ஆதிகும்பேஸ்வரர் - பாணபுரீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி உற்சவம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்-பாணபுரீஸ்வரர் கோவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி திருக் கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையொட்டி ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் காவிரி ஆறு பகவத் படித் துறையில் எழுந்தருளினார்.

இதேபோல் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதில் பாணபுரீஸ்வரர், சோமகலாம்பிகை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் காவிரி ஆறு பகவத் படித் துறையில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் மற்றும் பாணபுரீஸ்வரர் கோவில் அஸ்திரதேவர்களுக்கு பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாணபுரீஸ்வரர் கோவிலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.