இறைவனின் திருமேனியைக் குளுமைப்படுத்தி, "மனமுருகிச் செய்யும் வழிபாடே ‘அபிஷேகம்' ஆகும். பொதுவாக ஆலயங்களில் திரவியங்கள், பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோமியம், சாணம்), பஞ்சாமிர்தம், பழச்சாறுகள் என 16 வகையான சோடசோபசார அபிஷேகங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன. பிரபஞ்சத்தின் வெப்பத்தைத் தணித்து, உலக உயிர்களைக் காக்கவும், சிலா ரூபத்தில் உள்ள விக்ரகங்களின் தெய்வீக ஆற்றலைத் தூண்டி பக்தர்களுக்கு அருள் அலைகளைப் பரப்பவுமே மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
* தூய்மையான நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதைக் காண்பதாலும், அந்தத் தீர்த்தத்தைப் பருகுவதாலும் மனம் சாந்தி அடையும்.
* மூலவருக்கு நல்லெண்ணெய் காப்பு இட்டு அபிஷேகம் செய்யும்போது, பக்தி உணர்வு மேலோங்கும்.
* நறுமணம் மிக்க வாசனை திரவியங்களால் இறைவனை நீராட்டினால், ஆரோக்கியமான வாழ்வு அமையும்.
* தூய்மையான பசு நெய்யினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
* பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய, உடல் பிணிகள் நீங்கி நீடித்த ஆயுள் கிடைக்கும்.
* இறைவனின் திருமேனியை தேன் கொண்டு குளுமைப்படுத்தினால், குரல் வளம் சிறக்கும்.
* பசும்பாலால் அபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் வம்ச விருத்தியும், ஆயுள் விருத்தியும் உண்டாகும்.
* குளிர்ந்த தயிரினால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைப் பேறு கிடைக்கும்.
* அரிசிமாவு பொடியைக் கொண்டு அபிஷேகம் செய்ய, பிறவிப் பிணி யாவும் அகலும்.
* இளநீரால் அபிஷேகம் செய்து வர, புத்திர பாக்கியம் கிடைக்கும்.
* பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்ய, பாவ நிவர்த்தி ஏற்படும்.
* திருநீற்றால் அபிஷேகம் செய்ய, அறியாமை நீங்கி மெய்ஞானம் உண்டாகும்.
* சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட, இல்லத்தில் லட்சுமி கடாட்சமும், செல்வ வளமும் பெருகும்.