மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. அவளுக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
மகாலட்சுமி வில்வமரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டுகரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இருகரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
மகாலட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறம். லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்காளத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும். லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. வியாழனன்று மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு.
வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது. லட்சுமியின் திருக்கரங்கள் ‘ஸ்வர்ண ஹஸ்தம்’ எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத சஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி, அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.